தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அர்ப்பணிப்பும் அரவணைப்பும் நிறைந்த தியாகத் திருநாள்

4 mins read
f0bd8d44-ed32-48f8-b342-de970206ff7e
ஹஜ்ஜுப் பெருநாள் காலையில் பள்ளிவாசல்களுக்கு மக்கள் கூட்டமாகத் திரண்டு வந்தனர். - படம்: த.கவி
multi-img1 of 4

உலகத்திலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் கொண்டாடும் சிறப்புக்குரிய நாள் ஹஜ்ஜுப் பெருநாள் என அழைக்கப்படும் தியாகத் திருநாள்.

சிங்கப்பூர் பள்ளிவாசல்களும் பொதுமக்களும் இப்பண்டிகையைக் கோலாகலமாக ஜூன் 7 (சனிக்கிழமை) கொண்டாடினர் .

சிராங்கூன் ரோட்டிலுள்ள அங்குலியா பள்ளிவாசலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் மூன்று வேளைகளில் நடைபெற்றன. காலை 7.20க்கு ஆங்கிலத்தில், 8.30க்கு பெங்காலியில், மற்றும் 9.30க்கு தமிழில். மொத்தம் 7,000 பேருக்கும் அதிகமானோர் வருகை தந்தனர்.

அங்குலியா பள்ளிவாசலில் பணியாற்றும் இமாம் ஃபாரூக் அகமது, 34 (இடது).
அங்குலியா பள்ளிவாசலில் பணியாற்றும் இமாம் ஃபாரூக் அகமது, 34 (இடது). - படம்: த.கவி

தியாகத் திருநாள் என்பது, நமக்கு முக்கியமான பொருளைக்கூட இறைவனுக்காக விட்டுக்கொடுக்கிற நாளாகும் என்று அந்தப் பள்ளிவாசலின் இமாம் ஃபாரூக் அகமது, 34, தெரிவித்தார்.

“இறைவன் கட்டளைக்காக, நீண்ட நாள்களுக்குப் பிறகு பெற்ற தம் ஒரே மகனைப் பலியிடத் துணிந்த இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது,” என அவர் சொன்னார்.

“இந்தத் தியாக மனப்பான்மையை நாம் சமூகத்திலும் கடைப்பிடிக்கிறோம். நமக்கு அமர்வதற்கான இருக்கை தேவைப்பட்டாலும் நாம் வயதனாவருக்கு அதை விட்டுக் கொடுக்கிறோம் அல்லவா? அங்கு சமய பாகுபாட்டுக்கு இடமில்லை,” என்று இமாம் ஃபாரூக் கூறினார்.

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நடத்தப்படும் குர்பான் சடங்கு தொடர்பாகவும் பேசிய இமாம் ஃபாரூக், “நாம் பராமரித்த, வளர்த்த ஆட்டை நாமே வெட்ட வேண்டும் எனும்போது நம் இதயம் அதை ஏற்க மறுக்கும். அந்தக் தருணங்களில் ஏற்படும் கலக்கம், அச்சத்தால் வரும் கண்ணீர். அவையே இறைவன் எதிர்பார்க்கும் உண்மையான தியாக உணர்வின் வெளிப்பாடுகள்,” என்றார் இமாம் ஃபாரூக்.

அங்குலியா பள்ளிவாசலில் ஹஜ் திருநாள்  தொழுகைகள் மூன்று வேளைகளில் நடைபெற்றன.
அங்குலியா பள்ளிவாசலில் ஹஜ் திருநாள் தொழுகைகள் மூன்று வேளைகளில் நடைபெற்றன. - படம்: த.கவி

லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள மற்றோர் இந்திய முஸ்லிம் பள்ளிவாசலான அப்துல் கஃபூர் பள்ளிவாசலுக்கும் மக்கள் கூட்டமாகத் திரண்டு வந்தனர்.

அப்பள்ளிவாசலில் ஹஜ்ஜுப் பெருநாளன்று மூன்று காலை நேரத் தொழுகைகள் நடத்தப்பட்டன.

காலை மணி கிட்டத்தட்ட 7.20, 8.15, 9.15 ஆகியே நேரங்களில் தொழுகை நடத்தப்பட்டது.

அப்துல் கஃபூர் பள்ளிவாசலுக்கும் மக்கள் கூட்டமாகத் திரண்டு வந்தனர்.
அப்துல் கஃபூர் பள்ளிவாசலுக்கும் மக்கள் கூட்டமாகத் திரண்டு வந்தனர். - படம்: த.கவி

“பொதுவாகத் தொழுகை பள்ளிவாசலுக்கு உள்ளேதான் நடைபெறும், ஆனால் இந்த ஆண்டு அதிகமான மக்கள் வருவார்கள் என எதிர்பார்த்தோம். அதனால், கரைபுரளும் கூட்டத்தினர் தொழுவதற்கு இட வசதி அளிப்பதற்குச் சில பகுதிகளை வெளிப்புறத்திலும் ஒதுக்கினோம்,” என்றார் அப்பள்ளிவாசல் நிர்வாகக் குழு உறுப்பினர் அமர் ஈஸா, 38.

திருமணத்திற்கு பிறகு முதன்முறையாகத் தம் துணைவியாருடன் கொண்டாடும் ஹஜ்ஜுப் பெருநாளாக இந்நாள் அமைந்துள்ளதாகத் திரு அமர் முகமலர்ச்சியுடன் கூறினார்.

மொரோக்கோ நாட்டுவாசியான தம் மனைவி, அவரது நாட்டில் திருநாளின் கொண்டாட்டங்கள் சற்று வேறுபட்டதாக இருக்கும் எனத் திரு அமர் கூறினார்.

திரு அமர் ஈஸாவும், 38, அவரது துணைவியாரும்.
திரு அமர் ஈஸாவும், 38, அவரது துணைவியாரும். - படம்: த.கவி

செனெகலில் குர்பானைப் பல்லாண்டுகளாகச் செலுத்தி வந்ததால்  இவ்வாண்டும் அங்கேயே குர்பான் கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக அவர் கூறினார்.

அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் மூன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் நடத்தப்பட்டன.
அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் மூன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் நடத்தப்பட்டன. - படம்: த.கவி

சிங்கப்பூரில் குர்பானை நேரில் நடத்தும் பள்ளிவாசல்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாலும், பெரும்பாலான குர்பான் சடங்குகள் வெளிநாடுகளில் செய்யப்படுவதாலும், அந்நாடுகளில் செய்யப்படும் குர்பான் இறைச்சியை சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யும் சேவைகள் இருக்கின்றன.

ஆஸ்திரேலியா, பாலஸ்தீனம், ஏமன், ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் குர்பான் இறைச்சி நன்கொடை கொடுக்கும் வசதிகளையும் பள்ளிகளும் அமைப்புகளும் அண்மைய காலங்களில் வழங்கி வருகின்றன.

முந்தைய காலங்களைப் போல எல்லா பள்ளிகளிலும் விசாலமான முறையில் குர்பான் சடங்குகளைச் செய்ய முடியாதது குறித்து பள்ளிவாசல் தொண்டூழியர் பகுருதீன் அப்துல் ஜப்பார், 49, வருத்தம் தெரிவித்தார்.

“இளைய தலைமுறையினர் இந்த வழக்கத்தை நேரில் காணவும் அனுபவிக்கவும் வேண்டியது அவசியம். இணையம் அல்லது ஊடகங்களின் மூலம் அதனைப் பற்றி அறிந்துகொள்வது போதாது. அதை நேரில் காணும் வாய்ப்பு கிடைக்கும்போது அதன் ஆன்மீக முக்கியத்துவமும் உணர்வும் உண்மையிலேயே அவர்களுக்கு புரியும்,” என்றார் திரு பகுருதீன்.

அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் கடந்த 35 ஆண்டுகள் தொண்டூழியராகச் செயலாற்றிவரும் 71 வயது அப்துல் கலாம், தம் 13 வயது பேரனையும் பெருநாளைக் கொண்டாட அவருடன் அழைத்து வந்திருந்தார்.

71 வயது திரு அப்துல் கலாமும், அவரது 13 வயது பேரனும்.
71 வயது திரு அப்துல் கலாமும், அவரது 13 வயது பேரனும். - படம்: த.கவி

“இறைவன் நமக்குத் தந்த அருளைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதே நம் கடமை. மக்கள் சேவையில் எந்தவிதமான பாகுபாடும் இருக்கக்கூடாது. எனவே, இது என்னால் செய்யக்கூடிய ஒரு வகையான பொதுத் தொண்டாகும்,” என்று கண் கலங்கியவாறு திரு கலாம் தெரிவித்தார்.

அவருடைய மகன் அப்துல் ரஹ்மான், தியாகத் திருநாளை முன்னிட்டு ஹஜ் பயணத்திற்காக மெக்காவுக்குச் சென்றுள்ளார். அவர் இந்தப் பயணத்துக்காகச் சில ஆண்டுகளுக்கு முன்பே விண்ணப்பித்திருந்தாலும், கொவிட்-19 பெருந்தொற்றினால் அப்போது செல்ல முடியவில்லை. இப்போது தான் அவரது கனவு கைகூடியுள்ளது.

“ஹஜ்ஜு பயணம் என்பது அனைத்து முஸ்லிம்களுக்கும் கடமையாகும். நானும் பல ஆண்டுகளுக்கு முன்பு ஹஜ்ஜு பயணம் மேற்கொண்டுள்ளேன். அங்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்துள்ள மக்களைச் சந்திக்க முடியும். அங்கு ஏழை, பணக்காரர் என எவரிடமும் வேறுபாடு இருக்காது,” என்று திரு கலாம் கூறினார்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியை சார்ந்த திரு கலிலுதீன் தம் உற்றார் உறவினர் 20 பேருடன் அப்துல் கஃபூர் பள்ளிவாசலுக்கு வந்திருந்தார்.

“எங்கள் உறவினர்களில் பத்து பேர் தியாகத் திருநாளுக்காக ஊருக்குத் திரும்பியுள்ளனர். ஆனால் நாங்கள் இந்தத் திருநாளை சிங்கப்பூரிலேயே ஒன்றாகக் கொண்டாட முடிவெடுத்தோம். அப்துல் கஃபூர் பள்ளிவாசல் எங்கள் ஊர்ப்பள்ளிவாசலை நினைவுபடுத்துகிறது. அதே மாதிரியான ஆன்மிக உணர்வு இங்கே கிடைக்கிறது,” என்றார் திரு கலிலுதீன், 33.

குறிப்புச் சொற்கள்