தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹார்வர்ட் பல்கலைக்கழக சிங்கப்பூர் மாணவர்கள் உள்ளூரிலேயே கல்வியைத் தொடர வாய்ப்பு

2 mins read
75b1b06e-905b-40d4-8147-a137509b49b2
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தற்போது 151 சிங்கப்பூர் மாணவர்கள் பயின்றுவருவதாக அக்கல்வி நிலையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. - கோப்புப்படம்: ஏஎஃப்பி

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டக்கல்வி பயிலும் சிங்கப்பூர் மாணவர்கள் நாடு திரும்ப விரும்பினால் இங்குள்ள தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களில் அவர்கள் சேர்ந்து பயில வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கான சிங்கப்பூர்த் தூதர் லுயி டக் இயூ பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் கடந்த மே 30ஆம் தேதி இணையம் வழியாக நடத்திய சந்திப்புக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்ததாக அறியப்படுகிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்துக் கேட்டபோது, “தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் சிங்கப்பூர் மாணவர்கள் படிப்பைப் பாதியிலேயே கைவிட்டு நாடு திரும்ப விரும்பினால் இங்குள்ள தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்குத் தயாராக உள்ளன,” என்று கல்வி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இது தெரியப்படுத்தப்படும் என்றும் அவர்கள் சிங்கப்பூர் திரும்பி, இங்கேயே கல்வியைத் தொடர்வது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் அவர் சொன்னார்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் என இங்கு ஆறு தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தற்போது 151 சிங்கப்பூர் மாணவர்கள் பயின்றுவருவதாக அக்கல்வி நிலையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அவர்களில் அறுவர், அரசாங்கச் சேவை ஆணையத்தின் உபகாரச் சம்பளம் பெற்றவர்கள்.

அண்மையில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர் பரிமாற்றத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, அங்குப் பயின்றுவரும் ஏறக்குறைய 6,800 வெளிநாட்டு மாணவர்களின் நிலை கேள்விக்குறியானது.

இந்நிலையில், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க ஆறு மாதத் தற்காலிகத் தடைவிதிப்பதாகவும் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்