தாய்லாந்தின் ஹட் யாய் பகுதியில் உள்ள சிங்கப்பூரர்கள் இணையம்வழி வெளியுறவு அமைச்சிடம் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அந்நகரம் மோசமான வெள்ளத்தை எதிர்நோக்குவதால் அதுகுறித்த ஆக அண்மைய தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக அங்குள்ள சிங்கப்பூரர்களுக்கு இவ்வாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தென் தாய்லாந்தில் இருக்கும் ஹட் யாய் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 19லிருந்து 22ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் அங்கு வரலாறு காணாத அளவில் 595 மில்லிமீட்டர் அளவுக்கு மழை நீர் சேர்ந்தது.
அதனால் அங்குப் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து தாய்லாந்து அதிகாரிகள், ஹட் யாய்க்கு சிவப்பு நிற பேரிடர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளியுறவு அமைச்சு திங்கட்கிழமை (நவம்பர் 24) அறிக்கையில் தெரிவித்தது.
வெள்ளம் காரணமாக அந்நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் உணவு, அத்தியாவசியப் பொருள்கள் சென்றடைவதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது. பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர்களுக்குத் தகுந்த ஆதரவளிக்க பேங்காக்கில் உள்ள சிங்கப்பூர் தூதரகம், தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அமைச்சு கூறியது. உணவு வழங்குவது, போக்குவரத்துச் சேவைகள் குறித்து தகவல் தந்து உதவுவது ஆகியவை ஆதரவு நடவடிக்கைகளில் அடங்கும்.
தூதரக உதவி தேவைப்படுவோர் +66-2-348-6700 என்ற தொலைபேசி எண் அல்லது singemb_bkk@mfa.gov.sg என்ற இணைய முகவரியின் மூலம் பேங்காக்கில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தைத் தொடர்புகொள்ளலாம். அலுவலக நேரத்துக்குப் பிறகு உதவி தேவைப்பட்டால் +66-81-844-3580 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
இல்லாவிடில், 6379-8800 அல்லது 6379-8855 ஆகிய எண்களின்வழி சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் 24 மணிநேரச் செயல்பாட்டு அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்.

