செப்டம்பர் தொடக்கம் முதல் அக்டோபர் நடுப்பகுதி வரை, புகைமூட்டத்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய உடல்நலப் பாதிப்புகளுக்காக மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளை நாடியவர்களின் எண்ணிக்கை 20 விழுக்காடு அதிகரித்தது. பலதுறை மருந்தகங்களில் இந்த எண்ணிக்கை 25 விழுக்காடு உயர்ந்தது.
அக்டோபர் நடுப்பகுதி நிலவரப்படி, மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு நாள்தோறும் சராசரியாக 440 பேர் வருகை தந்ததாகப் பதிவாகியுள்ளது. இது, செப்டம்பர் தொடக்கத்தில் பதிவான அன்றாட சராசரி வருகையான எண்ணிக்கையுடன் (360) ஒப்பிடும்போது ஏறத்தாழ 20 விழுக்காடு அதிகம் என்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
இதே காலகட்டத்தில், பலதுறை மருந்தகங்களில் அன்றாட சராசரி வருகை ஏறத்தாழ 4,000லிருந்து 5,000ஆக அதிகரித்தது. இதில் 18 முதல் 64 வயதுக்குட்பட்ட பெரியவர்களிடையேதான் ஆக அதிகமான அதிகரிப்பு காணப்பட்டதாகவும் அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.
முன்னதாக, செப்டம்பர் 4ஆம் தேதி மத்திய வட்டாரத்தில் 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 101ஐ எட்டியது. இதன் மூலம் 2026ஆம் ஆண்டில் முதன்முறையாகக் காற்றுத் தூய்மைக்கேடு ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது.
இதற்கிடையே, அக்டோபர் 12 முதல் 24ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், புகைமூட்டத்திற்கான மானியத் திட்டத்தின் மூலம் 113,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின்கீழ், தகுதிபெறும் சிங்கப்பூரர்கள் 1,300க்கும் மேற்பட்ட தனியார் பொது மருத்துவ மருந்தகங்களில் புகைமூட்டம் தொடர்பான பாதிப்புகளுக்கான சிகிச்சை பெற $10க்குமேல் செலுத்த வேண்டியதில்லை.
இத்திட்டத்தில் பங்கேற்றுள்ள தனியார் மருத்துவ மருந்தகங்களில் 72,000க்கும் மேற்பட்ட வருகைகளும் பலதுறை மருந்தகங்களில் 41,000க்கும் அதிகமான வருகைகளும் பதிவாகியுள்ளதாகப் புக்கிட் பாஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஓங் எழுத்துபூர்வப் பதிலில் விளக்கம் அளித்தார்.
