இன்னும் விற்பனைக்கு விடப்படாத தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் கட்டுமானம் கிளமென்டி, தோ பாயோ, புக்கிட் மேரா ஆகிய இடங்களில் தொடங்கியுள்ளது.
கிளமென்டி அவென்யூ 6, காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட் சந்திப்பில் உள்ள 1.6 ஹெக்டர் நிலப்பரப்பில் 753 வீடுகள் கட்டப்படுகின்றன. அதுபோல், பிரேடல் ரைஸ், தோ பாயோ ரைஸ் சந்திப்பில் உள்ள 1.7 ஹெக்டர் நிலப்பரப்பில் 741 வீடுகளைக் கட்டும் பணி தொடங்கியுள்ளதாக நம்பப்படுகிறது.
மற்றொரு நிலவரத்தில், அலெக்சாண்டிரா சாலையில் உள்ள வீடமைப்புப் பகுதியில் 1,462 அடிப்படைக் கட்டுமானப் பணிகளைத் தொடங்க கழகத்துக்கு கட்டட, கட்டுமான ஆணையம் அனுமதி வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 1,462 வீடுகளில் 964 வீடுகள் 2023ஆம் ஆண்டு அறிமுகமான அலெக்சாண்டிரா பீக்ஸ் என்ற வீட்டுமனைத் திட்டத்தில் அடக்கம். இதில் மீதமுள்ள 498 வீடுகள்அலெக்சாண்டிரா பீக்ஸ் அருகில் இன்னும் அறிவிக்கப்படாத திட்டத்தைச் சாரும் என்று கூறப்படுகிறது.
கிளமென்டியில் கட்டப்படும் வீடுகள் 2005ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அந்நகரத்தை புனரமைக்கும் திட்டத்தின் ஒருபகுதி என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த வீடுகள் இப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒட்டுமொத்த மறுமேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் காலியான வீட்டுமனைப் பகுதியில் கட்டப்படுவதாக தெரியவந்துள்ளது.
இங்கு காணப்படும் கழகத்தின் அறிவிப்புகளின்படி, கட்டப்படும் 753 வீடுகள் ஈரறை, மூவறை, நான்கறை வீடுகளைக் கொண்டிருக்கும். இவற்றின் கட்டுமானம் செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்கியது. இந்த வீடுகள் 2029ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இங்கு 40 மாடிகள் கொண்ட மூன்று குடியிருப்புக் கட்டடங்கள், 34 மாடிகள் கொண்ட ஒரு கட்டடம் ஆகியவற்றுடன் ஒரு குழந்தை பராமரிப்பு நிலையம், கூரையுடன் கூடிய வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே தோ பாயோவில் கட்டப்படும் 741 வீடுகள் 2029ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் கட்டி முடிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இங்கு 40 மாடிகளைக் கொண்ட இரண்டு கட்டடங்கள் எழுப்பப்படும் என்று தெரிகிறது. இங்கும் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம், குழந்தை பராமரிப்பு நிலையம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
புக்கிட் மேராவில் 498 தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகள் பிரின்ஸ் சார்ல்ஸ் கிரசென்ட், அலெக்சாண்டிரா ரோடு சந்திப்பில் அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

