தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
எல்லைகள் கடந்து விரிவடையும் தாதிமைச் சேவை

அதிகமான இந்தியத் தாதியரை ஈர்க்க நடவடிக்கை: கான் கிம் யோங்

2 mins read
61fcc5a3-cdf5-4db4-8c76-0a3773949393
துணைப் பிரதமர் கான் கிம் யோங், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சிங்கப்பூர் அமைச்சர்கள் புதன்கிழமை (ஆகஸ்ட் 13) இந்திய அதிபர் திரௌபதி முர்முவைச் சந்தித்தனர். - படம்: பிஐபி
multi-img1 of 2

சுகாதார வல்லுநர்களுக்கான அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்திசெய்யும் முயற்சியில், சிங்கப்பூரும் இந்தியாவும் தாதியருக்கான கூட்டுப்பயிற்சிக்கான முயற்சியைத் தொடங்கும் இலக்கில் இணைந்துள்ளன.

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற இந்தியா - சிங்கப்பூர் மூன்றாவது அமைச்சர்நிலை வட்டமேசைச் சந்திப்பில் பங்கேற்ற  துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங், செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதனைத் தெரிவித்தார்.

அச்சந்திப்பு புதன்கிழமை (ஆகஸ்ட் 13)  உள்ளூர் நேரப்படி இரவு 11.30 மணியளவில் நடைபெற்றது. அப்போது, சிங்கப்பூர் - இந்தியா இணைந்து பணியாற்றவிருக்கும் முக்கியத் துறைகளைத் திரு கான் பட்டியலிட்டார்.

அந்தச் சந்திப்பின்போது சிங்கப்பூரின் தாதிமை சார்ந்த தேவைகளைப் பூர்த்திசெய்யப் பொதுச் சுகாதாரம், தாதிமைப் பயிற்சி உள்ளிட்டவற்றில் இருநாடுகளும் இணக்கமாகச் செயல்பட நிலவும் வாய்ப்புகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது

அவ்வகையில், வரவிருக்கும் ஆண்டுகளில் சிங்கப்பூர் - இந்தியா கைகோத்துச் செயல்படவுள்ள துறைகளில் சுகாதாரப் பராமரிப்பும் அடங்கும்.

இந்த நேர்காணலின்போது, சிங்கப்பூரில் சுகாதாரப் பராமரிப்பு வல்லுநர்களுக்கான தேவைகளை விவரித்தார் திரு கான்.

‘‘சிங்கப்பூரின் சுகாதாரத் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் தாதியரை நியமிக்க இந்தியாவுடன் இணைந்து செயலாற்றி வருகிறோம். சிங்கப்பூரில்  ஏராளமான இந்தியத் தாதியர் பணிபுரிந்து  வருகின்றனர். இங்குள்ள மருத்துவத் தேவைகளுக்கு உகந்த திறன்களுடன் தாதியர் திகழ்ந்திட அவர்களுக்கான பயிற்சித் தரங்களை மேம்படுத்த இந்தியாவுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்ற விழைகிறோம்,” என்றார் அவர்.

சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளுக்கு ஏற்ப தாதியர் திறன்மேம்பாடு காணவும் அதற்கேற்ப அவர்களுக்கான பயிற்சி அணுகுமுறைகளை மேம்படுத்தவும் இந்தியாவில் உள்ள பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவது குறித்த திட்டங்களுக்குச் செயல்வடிவம் அளிக்கும் வகையில் ஒத்துழைப்புத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

“இது, இந்தியத் தாதியர் விரிவான கூடுதல் பயிற்சிகளைப் பெறுவதற்கும், அதேவேளையில் சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளை எதிர்கொள்வதற்கான நோக்கையும் வலுப்படுத்தும். அதிகமான இந்தியத் தாதியர் சிங்கப்பூருக்கு வந்து பணிபுரியவும் அது வழிவகுக்கும்,’’ என்று துணைப் பிரதமர் கான் விளக்கினார்.

கடந்த அறுபது ஆண்டுகால நல்லுறவில் விளைந்த குறிப்பிடத்தக்க சாதனை குறித்தும் திரு கான் கருத்துரைத்தார்.

“கடந்த 60 ஆண்டுகளில், சிங்கப்பூர் - இந்தியா உறவில் எட்டப்பட்ட நன்னம்பிக்கை மற்றும் புரிதலின்வழி வலுவான அடித்தளத்தை உருவாக்கியது. அந்த நற்பலனே திறம்பட ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் இருதரப்பும் செயலாற்ற உதவியது,” என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்