சுகாதாரத் திட்டத்தை நிறைவு செய்வோருக்கு $10 மதிப்புள்ள சுகாதாரப் புள்ளிகள்

சுகாதாரத் திட்டத்தை நிறைவு செய்வோருக்கு $10 மதிப்புள்ள சுகாதாரப் புள்ளிகள்

2 mins read
3d743b4a-be0c-481d-901c-1ced6b3127ca
இவ்வாண்டு மே மாத நிலவரப்படி, 1.4 மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் திட்டத்தில் இணைந்துள்ளனர். - படம்: சாவ்பாவ்

ஹெல்தியர் எஸ்ஜி திட்டத்தில் இணைந்து சுகாதாரத் திட்டத்தை நேரடியாகப் பூர்த்திசெய்து ஹெல்த்ஹப் செயலியில் மேம்படுத்தப்பட்ட சுகாதாரத் திட்டத்தைக் காண்போர் $10 பெறுமானமுள்ள மின் பற்றுச்சீட்டுகளைப் பெறுவர்.

ஜூலை 1ஆம் தேதி முதல் 2029 டிசம்பர் இறுதிவரை சுகாதாரத் திட்டத்தை நிறைவேற்றவேண்டும்.

மருத்துவர்களை அடிக்கடி பார்த்து, சுகாதாரப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து, ஆரோக்கியமான இலக்குகளை உருவாக்குவதை ஊக்குவிக்க புதிய திட்டம் வகைசெய்கிறது.

திட்டத்தில் இணைய விரும்புவோர் முதல் சுகாதாரத் திட்ட ஆலோசனைக்குப் பிறகு 2029ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வருடாந்தர சுகாதாரப் பரிசோதனையை நேரடியாக மேற்கொள்ளவேண்டும்.

அதை நிறைவுசெய்தபின் மேம்படுத்தப்பட்ட சுகாதாரத் திட்டத்தை அவர்கள் ஹெல்த்ஹப் செயலியில் பார்க்கவேண்டும். அவ்வாறு செய்வோருக்கு $10 பெறுமானமுள்ள 1,500 ஆரோக்கியப் புள்ளிகள் ஹெல்தி 365 செயலியின் கணக்கில் நிரப்பப்படும்.

அந்தப் புள்ளிகளை மின்னிலக்கப் பற்றுச்சீட்டுகளாக மாற்றி பொதுப் போக்குவரத்துக்கும் உணவுக் கடைகளிலும் பேரங்காடிகளிலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆரோக்கியப் புள்ளிகள் மூலம் $580 வரையிலான மெடி‌ஷீல்ட் லைஃப் சந்தா கழிவுகளையும் பெற முடியும்.

நாட்பட்ட நோய்க்கான பரிசோதனைகளின்போது வருடாந்தர சுகாதாரத் திட்டப் பரிசோதனைகளைச் செய்துகொள்ளலாம். ஹெல்தியர் எஸ்ஜி திட்டத்துக்கு அப்பாற்பட்ட சேவைகளுக்குக் கட்டணங்கள் செலுத்தவேண்டும்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹெல்தியர் எஸ்ஜி திட்டம், 40 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூரர்களையும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளையும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்க ஊக்குவிக்கிறது.

அவர்கள், ஹெல்த்ஹப் செயலி மூலம் ஹெல்தியர் எஸ்ஜி திட்டத்தில் இணையலாம்.

இவ்வாண்டு மே மாத நிலவரப்படி, 1.4 மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் திட்டத்தில் இணைந்துள்ளனர். அது, திட்டத்துக்குத் தகுதிபெறும் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 59 விழுக்காடு.

திட்டத்தில் இணைந்தோரில் ஏறக்குறைய 83 விழுக்காட்டினர் முதல் சுகாதாரத் திட்டத்தை நிறைவுசெய்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்