சுகாதார சேவை, சிகிச்சை முடிவுகளில் நோயாளி அதிக கருத்துரைக்க வசதி

சுகாதார சேவை, சிகிச்சை முடிவுகளில் நோயாளி அதிக கருத்துரைக்க வசதி

2 mins read
049af248-82fa-46d5-b2dc-8b397354dcdc
என்எச்ஜி சுகாதாரக் குழுமத்தின் சுகாதார சேவை, விளைவு ஆய்வுப் பிரிவின் தலைவர் ஜான் அபிஷேகநாதன், ஆஸ்துமா பிரச்சினையுள்ள  திருவாட்டி மெர்லி ஹாங்கைப் பரிசோதிக்கிறார். இவர் டான் டோக் செங் மருத்துவமனையில் 2016 முதல் சிகிச்சை பெற்று வருகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முன்னெப்போதையும்விட தற்போது நோயாளிகள் தங்கள் உடல்நலன் குறித்து அவர்களே ஆராய்ந்நு முடிவெடுக்கும் வசதி சிங்கப்பூரின் சில பொது மருத்துமனைகளில் செயல்படுத்தப்படுகிறது.

நோயாளிகளால் தெரிவிக்கப்பட்ட விளைவுகளின் அளவீடு (பிஆர்ஓஎம்எஸ்) கேள்வி-பதில் மூலம் எளிதாகக் கணிக்கப்படுகிறது.

நோயாளிகள் தங்கள் சுகாதார நிலையை மதிப்பிட்டு, கருத்துரைக்கவும்; மருத்துவ முடிவுகளை ஆதரிக்கவும்; பொருத்தமான, மதிப்பு அடிப்படையிலான பராமரிப்பில் நோயாளிகளின் ஈடுபாட்டை ஊக்குவிக்கவும் சிங்கப்பூரின் மூன்று பொது சுகாதார குழுமங்களாலும் செயல்படுத்தப்படும் இந்த அளவீட்டு முறை பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவமனைகளில் உள்ள சில நோயாளிகள் தாங்கள் வீடு திரும்பலாமா, சமூக மருத்துவமனை பராமரிப்பு தேவையா, அணுக்கமான மருத்துவக் கண்காணிப்பு தேவையா என்பதை முடிவுசெய்யவும் இந்த அளவீட்டைப் பயன்படுத்தலாம்.

தகுந்த, மதிப்பு அடிப்படையிலான பராமரிப்புக்கு (ஏவிபிசி) இந்த அளவீடு ஓர் எடுத்துக்காட்டு.

இது நோயாளிகளுக்கு உண்மையிலேயே எது முக்கியம் என்பதில் கவனம் செலுத்துவதுடன், சுகாதாரப் பராமரிப்பு ஆதாரங்களின் அடிப்படையில் சிகிச்சையை வழங்குவதையும் உறுதி செய்கிறது. நோயாளிக்கு ஏற்படும் விளைவுகள் அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்துடன், அவர்கள் செலவழிக்கும் ஒவ்வொரு வெள்ளிக்கும் உகந்த மதிப்பைப் பெறுவதையும் இந்த முறை உறுதி செய்கிறது.

என்எச்ஜி சுகாதாரக் குழுமத்தின் சுகாதார சேவை, விளைவு ஆய்வுப் பிரிவின் தலைவர் ஜான் அபிஷேகநாதன், இது நோயாளிகள் தங்கள் மருத்துவர்களிடம் தெரிவிக்காத குறிப்பிட்ட ஆஸ்துமா பிரச்சினைகளில் கவனம் செலுத்த மருத்துவர்களுக்கு உதவுகிறது என்றார்.

மேலும், தரப்படுத்தப்பட்ட புள்ளி முறை, பராமரிப்புக் குழு முழுமைக்கும் ஒரு பொதுவான மருத்துவ மொழியை வழங்குவதன் மூலம் நோயாளிகளின் பராமரிப்பிற்கும் உதவும் என்றார் அவர்.

நோயாளிகளும் இந்த அளவீடு பயனுள்ளதாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

தேசிய பல்கலைக்கழக சுகாதாரக் கட்டமைப்பு (என்யுஎச்எஸ்) குழந்தைகள், சிறார்களின் தூக்க மேலாண்மைக்கு இந்த முறையைப் பயன்படுத்துகிறது. போதிய தூக்கம் இன்மையால் குழந்தையின் நடத்தை, கற்றல் திறன், வளர்ச்சி, உணர்வுநிலைகளைப் பாதிக்கலாம் என்பதுடன் பெற்றோருக்கு பெரும் உளைச்சலையும் தரக்கூடும்.

தடுப்பூசிக்கு முன்னர் பெற்றோர், குழந்தையின் தூக்கம் குறித்த கேள்விகளுக்குப் பதில் அளிப்பர். அது குழந்தையின் தூக்கத்தின் தரத்தை அளவிட மருத்துவர்களுக்கு உதவுகிறது.

அதேபோல், சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் வாதவியல், தடுப்பாற்றலியல் (Rheumatology and Immunology) பிரிவு தானியக்கக் கண்காணிப்பு முறையை 2025 ஜூன் நடப்புக்குக் கொண்டு வந்தது. அந்த இணையப் பதிவில் நோயாளிகள் மருத்துவரைக் காண்பதற்கு முன்னர், தங்கள் நோய் அறிகுறிகள் குறித்துப் பதிவிடலாம்.

பிஆர்ஓஎம்எஸை நாடு தழுவிய முறையில் பயன்படுத்த சுகாதார அமைச்சு பணியாற்றி வருகிறது, முறையான இதன் செயலாக்கம் நோயாளிகளின் ஈடுபாடு, விளைவுகள், தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சையை மேம்படுத்துவதை அனைத்துலக ஆய்வு காட்டுகிறது.

குறிப்புச் சொற்கள்