தாய்நாட்டின் எல்லைகளைத் தாண்டித் தொண்டூழியராக முன்வந்து கடமையாற்றும் குடிமக்கள், சிங்கப்பூரின் பாதுகாப்பிற்குக் கூடுதல் வலுச் சேர்க்கின்றனர்.
ராணுவப் பின்னணி இல்லாத சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் நாட்டின் பாதுகாப்பிற்குத் தீவிரமாய்ப் பங்களிப்பதற்காகத் தொடங்கப்பட்ட தளமாகச் சிங்கப்பூர் ஆயுதப்படைத் தொண்டூழியர் அணி (எஸ்ஏஎஃப்விசி) செயல்படுகிறது.
2014ல் தொடங்கப்பட்ட இந்த அணியின்வழி அடிப்படை ராணுவப் பயிற்சியைப் பெறும் இவர்கள், தொழில்முறை நிபுணத்துவத்தைப் பயன்படுத்திப் பல்வேறு பிரிவுகளில் வழக்கமான படையினருக்குத் துணைநிற்கின்றனர். ‘வாலபி 2026’ பயிற்சியில் இவர்களின் பங்களிப்பு கணிசமாக விரிவடைந்துள்ளது.
இணையப் பாதுகாப்புப் பொறியாளராகப் பணியாற்றும் 40 வயதுக் குடும்பத் தலைவர் எஸ்வி2 குமார் ரோஹித் ஸரிவால், இங்குப் பாதுகாப்பு நெறிமுறைகள், நுழைவுக் கட்டுப்பாட்டுப் பணிகளைத் திறம்பட நிர்வகிக்கிறார்.
2010ல் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்து கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொண்டூழியம் செய்யும் இவர், இரண்டாவது முறையாக இப்பயிற்சியில் பங்கேற்கிறார்.
“கணிக்க முடியாத மழை, கடும் வெப்பம் ஆகியவற்றுக்கு இடையே கண்காணிப்பு மேற்கொள்வது சவாலானதுதான். இளம் தேசியச் சேவை வீரர்களுடன் இணைந்து ஒரே இலக்கோடு பணியாற்றுவதும் அவர்களின் பணிச்சுமையைக் குறைத்து ஓய்வெடுக்க வழிசெய்வதும் மனநிறைவைத் தருகிறது. சிங்கப்பூரின் பாதுகாப்புக்கு என்னால் இயன்ற பங்களிப்பை வழங்குவதில் பெருமைப்படுகிறேன்,” என்று அவர் கூறினார்.
தொலைதூரக் களத்தில் சேவையாளர்களுக்குத் மருத்துவ உதவியை ஆற்றும் வீரர்களின் தயார்நிலையை உறுதிசெய்யும் பொறுப்பு, 37 வயது எஸ்வி1 ஷேரன் சியோங்கின் கையில் உள்ளது.
சிங்கப்பூரில் அவசர சிகிச்சைப் பிரிவுத் தாதியாகப் பணியாற்றும் இவர், களத்தில் ராணுவ மருத்துவக் குழுவினருக்கு அன்றாடச் சிகிச்சைகளில் கைகொடுக்கிறார்.
“சிங்கப்பூரில் வழங்குவதைப் போன்றே இங்கும் அதே உயர்தர மருத்துவச் சிகிச்சை முறைகள்தாம் வீரர்களுக்கு வழங்கப்படுகின்றன. மருத்துவமனை நீண்ட தொலைவில் அமைந்துள்ளதால், அவசர நேரத்தில் உடனடி மருத்துவ உதவிகளைச் செய்ய எங்கள் குழு தயாராக உள்ளது. தாய்நாட்டின் தற்காப்பிற்குப் பயிற்சி பெறும் நம் வீரர்களுக்கு ஆதரவளிக்க முன்வந்ததில் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
