சிங்கப்பூரில் ஜனவரி 10ஆம் தேதியிலிருந்து 13 வரை விடாமல் பெய்த கனமழை ‘நீண்ட, தீவிரமான’ மழை என்று சிங்கப்பூர் வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) தெக்கோங் தீவில் 241.8 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியது. இது, முந்தைய உச்சமான 2011 ஜனவரி 30ஆம் தேதி உபின் தீவில் பதிவான 238.2 மி.மீட்டரைவிட அதிகமாகும்.
வெள்ளிக்கிழமை தொடங்கிய கனமழை, திங்கட்கிழமைக்குப் பிறகே குறையத் தொடங்கியது. இதையடுத்து சில சமயங்களில் இடியுடன் கூடிய மழையின் வேகம் குறைந்தது என்று நிலையம் தெரிவித்தது.
பருவமழை அதிகரிப்பு, தென்சீனக் கடலில் நிலவிய வலுவான காற்றைக் குறிக்கிறது. இதன் காரணமாக இவ்வட்டாரத்தைச் சுற்றி மழை மேகங்கள் அதிகரித்தன. தீவு முழுவதும் நான்கு நாள்களாக அன்றாட மழையின் அளவு 44.4 மி.மீலிருந்து 120.2 மி.மீட்டர் வரை இருந்தது. இந்த நான்கு நாள்களில் வெள்ளிக்கிழமை புதிய உச்சமாக சராசரி மழையின் அளவு 120.2 மில்லிமீட்டராக பதிவானது.
1980களிலிருந்து மழைப்பொழிவு பதிவு செய்யப்பட்டு வருகிறது. தீவு முழுவதும் உள்ள 32 நிலையங்களை அடிப்படையாகக் கொண்டு மழையின் அளவு கணக்கிடப்படுகிறது.
சிங்கப்பூரின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பொதுவாக அதிக மழைப்பொழிவு பதிவாகும் என சிங்கப்பூர் வானிலை நிலையம் கூறியது. ஜனவரி 10 முதல் 13 வரை இடைவிடாது மழை பெய்ததற்குப் பருவமழையே காரணம்.
தீவு முழுவதும் குறைந்தபட்ச அன்றாட வெப்பநிலை பொதுவாக 22 முதல் 24 செல்சியாக இருக்கும். இந்த நிலையில் சனிக்கிழமை நியூட்டனில் ஆகக் குறைவாக 21.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
ஜனவரியில் அன்றாட குறைந்தபட்ச வெப்பநிலை 19.4 டிகிரி செல்சியஸ் ஆகும். இது, 1934ஆம் ஆண்டில் ஜனவரி 30, 31ஆம் தேதிகளில் மவுண்ட் ஃபேபரில் பதிவானது.