வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது சம்பள நிலுவைப் போன்ற கோரிக்கைகளை எளிதாக எழுப்புவதற்கும், அவர்களுக்கு இன்னும் மேம்பட்ட வகையில் உதவிக்கரம் நீட்டுவதற்கும் மனிதவள அமைச்சு நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது.
அவ்வகையில், கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட செயலி, தொண்டூழியர் திட்டத்தை மீண்டும் பயன்படுத்தி வெளிநாட்டு ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்த விவரங்களை அறிவதில் உள்ள இடைவெளியைக் களைவது அமைச்சின் இலக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சிக்கு கைகொடுக்கும் வகையில் ஃபிரண்ட்ஸ் ஆஃப் ஏஸ்’ (ஃபேஸ்) எனப்படும் தொண்டூழியர் திட்டத்தின்கீழ் வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுவதாக மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் கூறினார்.
சம்பளப் பிரச்சினைகள் போன்றவற்றை அந்தத் தொண்டூழியர்கள் மூலம் அவர்களின் சக ஊழியர்கள் மேலும் எளிதில் தெரியப்படுத்த வகைசெய்வது இதன் நோக்கமாகும்.
அண்மையில் ஒரே உரிமையாளரின் கீழ் இயங்கிய 3 நிறுவனங்கள், 400க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காதது பிரச்சனையாக எழுந்தது. அது குறித்து பேசிய திரு தினேஷ், வெளிநாட்டு ஊழியர்கள் ஆரம்பத்திலேயே இதுகுறித்துத் தகவல் அளித்திருந்தால், அமைச்சு விரைவாக நடவடிக்கை எடுத்திருக்க முடியும் என்றார்.
கலாசார, சமூக இளையர்துறை துணை அமைச்சருமான தினேஷ், மனிதவள அமைச்சின் எஃப்டபிள்யுஎம்ஓஎம்கேர் (FWMOMCare) செயலி போன்றவற்றின் மூலம் வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கைகொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து பேசியபோது, திரு தினேஷ் வெளிநாட்டு ஊழியர்கள் கொண்டிருக்கும் தயக்கங்களையும் சுட்டினார்.
‘‘ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளைப் பதிவு செய்ய பற்பல வழிகள், சேவைகள் இருப்பதை அறிந்திருந்தாலும், வேலையிழப்பு, அல்லது தாய்நாட்டிற்குத் மீண்டும் அனுப்பப்படலாம் என்ற அச்சத்தினால், அதிகாரபூர்வமாக புகார் அளிக்க தயங்கியிருக்கக்கூடும்,’’ என்று கூறிய துணை அமைச்சர், ‘‘அவர்களின் கருத்துகள் செவிமடுக்கப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும்,” என்றும் தெரிவித்தார்.
பணிச்சூழல் என்பதைக் கடந்து, வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது கவலைகள், பிரச்சனைகளை அச்சமின்றி தெரிவிப்பதற்கு, சிங்கப்பூரில் உள்ள எட்டு பொழுதுபோக்கு நிலையங்களை ஏற்றதொரு இடமாகப் பயன்படுத்த மனிதவள அமைச்சு பரிசிலீத்து வருவதாகவும் திரு தினேஷ் தெரிவித்தார்.
பெரிய, நடுத்தரப் பரப்பளவைக் கொண்ட தங்குவிடுதிகள், தனியார், அரசாங்க வீடுகள் ஆகியவற்றில் வசிக்கும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொண்டூழியர்கள் 1,000 பேரை வெளிநாட்டு ஊழியர் நிலையம் நிர்வகித்துவருகிறது.
அந்தத் தொண்டூழியர்க் குழுவால் தங்குவிடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் நால்வரில் மூவரைச் சென்றடைய முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
