வெளிநாட்டு ஊழியர்களும் இல்லப் பணிப்பெண்களும் மனநல ஆதரவை நாடுவதற்குத் தயங்குவது அண்மை ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
வேலை போய்விடுமோ என்று அவர்கள் அஞ்சுவதே அதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.
இங்குள்ள மனநலச் சேவைகள் பற்றிச் சிலர் அறிந்திருக்கவில்லை அல்லது அதற்கு அதிகச் செலவாகும் என்று கருதியிருந்தனர் என ஆய்வு குறிப்பிட்டது. மனநலக் கழகமும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சா சுவீ ஹோக் பொதுச் சுகாதாரப் பள்ளியும் இணைந்து அந்த ஆய்வை மேற்கொண்டன.
வெளிநாட்டு ஊழியர்களில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினரும் இல்லப் பணிப்பெண்களில் ஏறக்குறைய பாதிப் பேரும் உணர்வு ரீதியான பிரச்சினைகளுக்குக் குடும்பத்தினரையும் நண்பர்களையுமே நாடினர்.
‘ஆர்க்கைவ்ஸ் ஆஃப் பப்ளிக் ஜர்னல்’ எனும் கல்வித்துறைச் சஞ்சிகையில் ஆய்வின் விவரங்கள் இவ்வாண்டு (2026) ஜனவரி 30ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தன. 2023க்கும் 2022க்கும் இடையில் நடத்தப்பட்ட ஆய்வில் 1,465 வெளிநாட்டு ஊழியர்களும் 1,462 இல்லப் பணிப்பெண்களும் கலந்துகொண்டனர்.
தங்குவிடுதிகள், பொழுதுபோக்கு நிலையங்கள் போன்றவற்றில் இருந்தோரிடம் மனிதவள அமைச்சின் ஆதரவோடு ஆய்வு நடத்தப்பட்டது. அமைச்சு அந்த ஆய்வை மேற்கொண்டதோடு அதற்கு நிதியுதவியும் அளித்தது. 14 கலந்துரையாடல்களில் பங்கேற்றோரின் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன.
இந்தியா, சீனா, பங்ளாதேஷ் முதலிய நாடுகளின் ஊழியர்களும் பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா, மியன்மார் ஆகிய நாடுகளின் இல்லப் பணிப்பெண்களும் ஆய்வில் கலந்துகொண்டனர்.
அதே தரவுகளின் அடிப்படையில் இரண்டாம் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. ஊழியர்களிடையே மனச்சோர்வு, கவலை போன்றவற்றுக்கான அறிகுறிகள் தோன்றினவா என்று அதில் கேட்கப்பட்டிருந்தது. அவை எந்த அளவுக்கு அவர்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்தன என்றும் கேட்கப்பட்டது. ‘ஏனல்ஸ்’ எனும் சிங்கப்பூரின் மருத்துவக் கல்விநிலையத்தினுடைய அதிகாரத்துவச் சஞ்சிகையில் கடந்த மாதம் (பிப்ரவரி) 11ஆம் தேதி வெளியான கட்டுரையில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
தொடர்புடைய செய்திகள்
1,000 வெளிநாட்டு ஊழியர்களில் எட்டுப் பேருக்கு மனச்சோர்வு மிதமானது முதல் கடுமையானதுவரை இருப்பதாக ஆய்வு சுட்டியது. வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களைப் பொறுத்தவரை அது 1,000 பேருக்குக் கிட்டத்தட்ட 41ஆக உள்ளது.
அதே நேரம், 1,000 வெளிநாட்டு ஊழியர்களில் ஏறக்குறைய 13 பேருக்குக் கவலைப்படுவதற்கான அறிகுறிகள் மிதமானது முதல் கடுமையானதுவரை உள்ளது. வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களிடையே அது 1,000 பேருக்குக் கிட்டத்தட்ட 42ஆக இருக்கிறது.
அத்தகைய அறிகுறிகள் உள்ள ஊழியர்களுக்கு மனநலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய ஆபத்து அதிகம் என்று முதன்மை ஆய்வாளரும் மனநலக் கழகத்தின் மருத்துவ ஆய்வு நிர்வாகக் குழுவின் துணைத் தலைவருமான டாக்டர் மைதிலி சுப்ரமணியம் கூறினார். இருப்பினும் பயிற்சிபெற்ற சுகாதாரப் பராமரிப்பு நிபுணர் ஒருவர் மருத்துவப் பரிசோதனைகளின் மூலம் முழுமையாக மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம் என்றார் அவர்.

