சிங்கப்பூரில் பிள்ளைகளின் பாலர் கல்விக்குக் குடும்பங்கள் கூடுதலாகச் செலவிடுவது தெரியவந்துள்ளது.
அதிகமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இளம் வயதிலேயே குழந்தைப் பராமரிப்பு நிலையங்களில் சேர்ப்பதாகக் கூறப்படும் நிலையில் இத்தகவல் வெளியானது.
சிங்கப்பூர்வாசிகளைக் (சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும்) கொண்ட குடும்பங்களுக்கு இடையே, தொடக்கப்பள்ளிக்கு முந்தைய கல்விக்கான வருடாந்தரச் செலவு 2023ஆம் ஆண்டில் $1.3 பில்லியனாக அதிகரித்ததாக அண்மைய குடும்பச் செலவினக் கருத்தாய்வு கூறுகிறது. 2018ஆம் ஆண்டு அது $1 பில்லியனாக இருந்தது.
குடும்பங்கள் மாதந்தோறும் கல்விக்குச் செலவிட்ட தொகை 2023ஆம் ஆண்டில் $404.20ஆக அதிகரித்தது. முன்னர் அது $340ஆக இருந்தது. துணைப்பாட வகுப்புகள், பாலர் கல்வி ஆகியவை தொடர்பான செலவுகள் அதிகரித்தது இதற்குக் காரணம்.
சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை டிசம்பர் 2024ல் அண்மைய புள்ளிவிவரங்களை வெளியிட்டது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2023 டிசம்பர் வரை, ஏறத்தாழ 13,100 குடும்பங்களிடம் அது தகவல் சேகரித்தது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தக் கருத்தாய்வு, சிங்கப்பூர் குடும்பங்களின் செலவு, சேமிப்பு, வருவாய் தொடர்பான தகவல்களைச் சேகரிக்கிறது.
பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு (ECDA), 2023 அக்டோபரில் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் கூடுதலான பிள்ளைகள் பாலர் பள்ளிகளில் பயில்வதைக் காட்டுகிறது.
இரண்டு மாதங்களுக்கும் 18 மாதங்களுக்கும் இடைப்பட்ட வயதுடைய பச்சிளங் குழந்தைகளைப் பராமரிக்கும் நிலையங்களில் சேர்க்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை, 2018ல் 5,364 ஆக இருந்தது. 2023ல் அது 10,485 ஆனது.
தொடர்புடைய செய்திகள்
குழந்தைப் பராமரிப்பு நிலையங்களில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2018ல் 118,296ஆகவும் 2023ஆம் ஆண்டில் 152,634ஆகவும் பதிவானது.
பாலர் பருவக் கல்வியைக் கட்டுப்பாடியானதாக வைத்திருக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த ஆண்டு அவற்றுக்கான கட்டண வரம்பைக் குறைத்துள்ளது.
இத்தகைய சலுகைக்குப் பிறகு அடுத்த மாதத்திலிருந்து (பிப்ரவரி) தங்கள் இரு பிள்ளைகளுக்கும் பாலர் கல்விக்காக மாதந்தோறும் $2,250 செலுத்தவேண்டியிருக்கும் என்று திருவாட்டி ஹேமா பத்மநாதனும் அவரது கணவர் டேரில் செங்கும் கூறினர். இவர்களின் மகளுக்கு ஐந்து வயது. மகனுக்கு வயது ஒன்பது மாதங்கள். இல்லப் பணிப்பெண் இல்லாததால் இவர்கள் குழந்தை, பச்சிளங் குழந்தைப் பராமரிப்பு நிலையங்களின் சேவையை நாடுகின்றனர்.

