சிங்கப்பூர் வரலாற்றில் தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றுள்ள சொங் பாங் வட்டாரம், புதுப்பிப்பு கண்டு வந்தாலும், அதன் பழைமையை என்றும் அழியாக் காவியமாகப் படம்பிடிக்கும் காப்பி மேசை நூல் வெளியிடப்பட்டுள்ளது.
சொங் பாங் வட்டாரத்தின் பல்லாண்டுகால சமூக உணர்வைக் கொண்டாடும் வருடாந்தர சொங் பாங் தினமான சனிக்கிழமை (நவம்பர் 2) காலை உள்துறை, சட்ட அமைச்சரும் நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கா.சண்முகம் அந்நூலை அடித்தள அமைப்புகளோடு இணைந்து வெளியிட்டார்.
தற்போது கட்டப்பட்டுவரும் சொங் பாங் ஒருங்கிணைந்த நிலையம், மூன்று ஆண்டுகளில் வட்டாரவாசிகளுக்கு நீச்சல் குளங்கள், புதிய சமூக மன்றம், உணவங்காடி நிலையம், சந்தை, உடற்பயிற்சிக்கூடம் போன்ற வசதிகளைக் கொண்டிருக்கும்.
அதற்கு வழிவிடுவதற்காக இடிக்கப்பட்ட புளோக் 102 ஈசூன் அவென்யூ 5ன் சிறப்புகளை நினைவுகூரும் இந்நூலை நீ சூனில் உள்ள ஒவ்வொரு பள்ளியும் பெறும்.
சொங் பாங்கின் வரலாற்றை பார்வையிடும் அதேவேளை, நம்பிக்கை நிறைந்த எதிர்காலத்தையும் பற்றி சிந்திக்கத் தூண்டியது, நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் இடம்பெற்ற கண்காட்சி.
65 கிலோகிராம் எடையை 102 முறை தூக்கிய அமைச்சர்
மூன்றாம் ஆண்டாக நடைபெற்ற உடலுறுதிச் சவாலில் பங்கேற்று, தம் உடலுறுதியை மீண்டும் நிரூபித்தார் அமைச்சர் சண்முகம்.
சற்று இருமலுடன், உடல்நலம் குன்றியிருந்தாலும் அவர் முழுமூச்சாக களமிறங்கினார்.
தன் உடல் எடைக்கு ஈடாக, 65 கிலோகிராம் எடையை 102 முறை தூக்கி, தன் சொந்த சாதனையை அவர் முறியடித்துள்ளார். ஒரு நிமிடத்தில் ஆறு முறை அந்த எடையைத் தூக்கியபின் 90 வினாடிகள் இளைப்பாறிவிட்டு, மீண்டும் அவர் தொடர்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவருடன் சேர்ந்து, ‘தி ஃபிட்னஸ் புரோட்டோகால்’ உடற்பயிற்சிக் கூடத்தை சேர்ந்த ஏறக்குறைய 20 பேர் தங்கள் சொந்த எடைக்கு ஈடான பளுவைத் தூக்கினர். அவர்கள் இளைப்பாறிய வேளையில், மற்றொரு குழு ‘டம்ப்பெல் கிளீன் அண்ட் ஜர்க்’ (dumbbell clean and jerk) சவாலில் இறங்கியது.
2022 சவாலில், அமைச்சர் சண்முகம் தன் எடையில் இருமடங்கான 125 கிலோகிராம் எடை தூக்கி சொந்த சாதனை படைத்திருந்தார். சென்ற ஆண்டு அவர் பளு தூக்காமல் 100 குடியிருப்பாளர்களுடன் இணைந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டார்.
“உடற்பயிற்சி என்பது அனைவரையும் ஒன்றிணைக்க ஒரு சிறந்த வழி. வெவ்வேறு வயதுப் பிரிவுகளைச் சேர்ந்த குடும்பத்தினர், நண்பர்களை உடற்பயிற்சியில் ஈடுபடுத்துவதால், அவர்களது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உறவுகளையும் வலுப்படுத்தமுடியும்,” என்றார் திரு சண்முகம்.
தொண்டூழியப் பயணங்கள்
சொங் பாங் இந்தியர் நற்பணிச் செயற்குழு முன்னாள் தலைவரும் சொங் பாங் சமூக மன்ற நிர்வாகக் குழுக்களின் துணைப் பொருளாளருமான ஜெயந்தி புண்ணியமூர்த்தி, 57, சொங் பாங் சமூக மன்றத்தில் 31 ஆண்டுகளாக தொண்டூழியராக இருந்து வருகிறார்.
“ஆண்டுதோறும் நம் குடியிருப்பாளர்களை ஒன்றிணைத்து, அவர்களுக்கு என்னென்ன சமூக முயற்சிகள் உள்ளன என்பதை இந்நிகழ்ச்சிவழி காட்டுகிறோம்,” என்றார் ஜெயந்தி.
சொங் பாங் சமூக மன்றத்தின் இந்தியர், மலாய் நற்பணிச் செயற்குழுக்களின் செயல்பாடுகள் பற்றியும் ஆரோக்கிய வாழ்க்கைமுறை, நீடித்த நிலைத்தன்மை பற்றியும் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
“நாங்கள் தீபாவளி நிகழ்ச்சிகள் மட்டுமன்றி பண்டிகைக் காலத்தில் உணவு திரட்டு போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்கிறோம். இளையர்களுடன் இணைந்து செயல்பட, பள்ளிகளையும் சென்றடைகிறோம்,” என்றார் சொங் பாங் இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவர் பிரவீன் சந்திரன், 36.
அமைச்சர் சண்முகத்துடன் அவரும் உடலுறுதிச் சவாலில் களமிறங்கினார்.

