தைப்பூசத் திருநாளும் காவடியின் சிறப்பும்

தைப்பூசத் திருநாளும் காவடியின் சிறப்பும்

2 mins read
0bd69dd6-2530-4264-a9d3-4c9c748b8ff3
பால் குடம், காவடிகளைச் சுமந்து பாத யாத்திரையாகச் செல்லும் பக்தர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கி.விஜயலட்சுமி

மக்கள் எங்குச் சென்றாலும், அவர்களின் மனத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கும் பாரம்பரியத்தைச் சுமந்துசெல்வர் என்பதற்கு சாட்சியாக இருக்கும் விழாக்களில் ஒன்றுதான் தைப்பூசம்.

அவ்விழா, தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் வழிபாட்டை மையமாகக் கொண்டது. தமிழ் மாதங்களில் பத்தாவதாக வரும் தை மாதத்தில், பூசம் நட்சத்திரம் வரும் நாளை தைப்பூசத் திருநாளாகக் கொண்டாடுகின்றனர்.

அந்நாளின் சிறப்பு குறித்தும் அதற்குப் பின்னால் சொல்லப்படும் கதை குறித்தும் இதில் காணலாம்.

சூரன் என்ற அரக்கனுடன் போரிடுவதற்காக முருகன் தயாராகி வந்ததாகவும் சூரனை வெல்வதற்காக முருகனின் தாயார் பார்வதி தேவி அவருக்குச் சக்தி பொருந்திய வேல் ஒன்றைப் பரிசாக அளித்ததாகவும் சொல்லப்படுகிறது.

அந்த வேலை முருகன் பெற்ற நாளையே பக்தர்கள் தைப்பூசமாகச் சிறப்பிக்கின்றனர்.

ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டியை, முருகன் சூரனை வென்ற நாளாக முருகப் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

காவடியின் சிறப்பு

முருகனை வழிபடுவதற்குப் பல வழிபாட்டு முறைகள் இருந்தாலும், காவடிக்கு மட்டும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. அந்த வழிபாட்டுக்குப் பின்னால் இருக்கும் கதையைப் பார்ப்போம்.

அகத்திய முனிவரின் சீடர்களில் ஒருவர் இடும்பன். ஒருமுறை அகத்தியர் இடும்பனை அழைத்து, முருகன் வழிபாட்டிற்காகச் சிவகிரி, சக்தி கிரி ஆகிய இரு மலைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டார்.

அகத்தியரின் கட்டளைப்படி இடும்பனும் இரு மலைகளைத் தோளின் இருபுறமும் சுமந்தபடி காவடியாகக் கட்டி எடுத்து வந்தார்.

அப்போது, அசதியாக இருந்ததால் காவடியை ஓர் இடத்தில் இறக்கி வைத்தார். பின்னர், தூக்க முயன்றபோது அவரால் முடியவில்லை. அப்போது சிவகிரி மேலே ஒரு சிறுவன் கோவணத்துடன் தன் கையில் தண்டுடன் நிற்பதைப் பார்த்தார்.

அச்சிறுவன் திருக்கடவுள் முருகன் என்பதை அறியாத இடும்பன், அவருடன் சண்டையிட்டார்.

இடும்பனை வதம் செய்த முருகன், அவரைத் தமது பாதுகாவலராக வைத்துகொண்டார் என்கிறது புராணம். இடும்பனின் கடினமான காவடிப் பயணத்தை, முருகனை வழிபடுவோர் மேற்கொண்டால் அவரது அருளைப் பெற முடியும் என முருகக் கடவுளே ஒருமுறை குறிப்பிட்டதாகச் சொல்லப்படுகிறது.

அக்கதை இன்று முருகனின் தனித்துவமான வழிபாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. காவடியை ‘இடும்பன் காவடி’ என்றும் பக்தர்கள் அழைப்பதுண்டு.

சிங்கப்பூர், உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் தங்கள் கோரிக்கைகளைக் காவடிகளின் இரும்புறங்களிலும் சுமந்து, பாத யாத்திரையாக வந்து முருகனின் திருக்கோயில்களில் சமர்ப்பிக்கின்றனர்.

பக்தர்களின் கோரிக்கைகளுக்கு முருகன் செவிசாய்ப்பார் என்பது அவர்களின் ஆழமான நம்பிக்கை.

vikrish@sph.com.sg

குறிப்புச் சொற்கள்