சிறுநீரகம், நமது உடலிலிருந்து கழிவை அகற்றும் உறுப்பாகும்.
அது செயலிழந்தால் வழங்கப்படும் எச்டி எனும் ஹீமடயேலிசிஸ் சிகிச்சை பொதுவாக ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்களில் (dialysis centres) வழங்கப்படும். வீட்டில் வழங்கப்படும் ‘பீடி’ என்றழைக்கப்படும் ‘பெரிட்டோனியல் டயாலிசிஸ்’ சிகிச்சை முறையும் உண்டு.
ஆனால், சிங்கப்பூரில் இந்த சிகிச்சை முறைக்குத் தகுதிபெறுவோரிடையே பலர் இதைத் தெரிவுசெய்வதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறையைத் தேர்வுசெய்ய ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் இந்நிலை உருவாகியுள்ளது.
எச்டி, ‘பீடி’ இரண்டும் உடலிலிருந்து கழிவையும் நீரையும் அகற்றும். ஆரோக்கியமானோர் சிறுநீர் கழிப்பதன் மூலம் இயல்பாகவே உடலிலிருந்து கழிவை அகற்றுவர்.
சிங்கப்பூரில் நான்கில் மூவர் எச்டி சிகிச்சை முறையை விரும்புகின்றனர். அதன்படி நோயாளிகள் வாரந்தோறும் மூன்று முறை ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்களுக்குச் சென்று சிகிச்சை பெறுவர். அதன்படி உடலிலிருந்து ரத்தத்தை எடுத்துச் சுத்தம் செய்து மீண்டும் உடலுக்குள் செலுத்த மூன்றிலிருந்து நான்கு மணிநேரம் ஆகும்.
சுயமாக சிகிச்சை செய்துகொள்வதன் தொடர்பிலான அச்சம், ‘பீடி’, எச்டி ஆகிய இரண்டைப் பற்றியும் போதுமான புரிதல் இல்லாதது போன்றவவை நோயாளிகள் பலர் பீடி முறையை விரும்பாததற்குக் காரணம் என்று சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் பீடி திட்ட இயக்குநராகப் பொறுப்பு வகிக்கும் துணைப் பேராசிரியர் மார்ஜோரி ஃபூ குறிப்பிட்டார்.
ஒருவரின் சிறுநீரகம் செயலிழந்தால் மாற்று சிறுநீரகம் பெற்றுக்கொள்வதுதான் ஆகச் சிறந்தது. சிங்கப்பூரில் மாற்று சிறுநீரகம் பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
2024ஆம் ஆண்டில் 2,000க்கும் அதிகமானோருக்கு சிறுநீரகம் செயலிழந்துபோனது. அவர்களில் 103 பேர் மட்டுமே மாற்று சிறுநீரகத்தைப் பெற்றுக்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
மாற்று சிறுநீரகத்துக்குப் பதிலாக எச்டி அல்லது ‘பீடி’ சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
வீட்டில் ‘பீடி’ சிகிச்சையைப் பெற அச்சம்கொண்ட சிலருக்குப் பின்னர் அதன்மீது நம்பிக்கை வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் பொது மருத்துவமனை, தேசிய சிறுநீரக அறநிறுவனம் போன்றவை வழங்கும் ஆதரவு அவர்களுக்கு நம்பிக்கை தந்தது.
‘பீடி’ முறையின்கீழ் உடலிலிருந்து கழிவை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் 24 மணிநேரமும் செயல்படும் உதவி அழைப்பு எண், தேசிய சிறுநீரக அறநிறுவனத்தின் தாதி அடிக்கடி வீட்டுக்கு வந்து பராமரிப்பை வழங்குவது போன்றவற்றின் மூலம் ஆதரவு வழங்கப்படுகிறது.
தேசிய சிறுநீரக அறநிறுவனம் வழங்கும் சலுகைகளைக் கருத்தில்கொள்ளும்போது மிகக் குறைவான விலையில் இந்த சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும், தொலைக்காட்சி பார்ப்பது போன்ற அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டே ‘பீடி’ சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
எச்டி சிகிச்சை முறையில் இந்த நீக்குப்போக்கு கிடையாது என்கிறார் பேராசிரியர் ஃபூ.
இதுகுறித்து தேசிய சிறுநீரக அறநிறுவனத் தலைமை நிர்வாகி யென் டான், “நோயாளிகள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ள ‘பீடி’ வழிவகுக்கும்போதும் நமது தாதியர், நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்க அவர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றனர்,” என்று சுட்டினார்.

