உலக அளவில் மட்டுமல்ல, சிங்கப்பூரிலும் பல்வேறு அச்சுறுத்தல்களைக் கையாள வேண்டியிருப்பதால், அவற்றை எதிர்கொள்வதற்கான திறன்களை வளர்ப்பதில் அரசாங்கம் தொடர்ந்து முதலீடு செய்யும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
வெளிநாட்டில் உள்ள பயங்கரவாதக் குழுக்களை எதிர்கொள்வது மட்டுமன்றி, உள்ளூரிலும் தீவிரவாதப் போக்குக்கு ஆளாவோரையும் கையாள வேண்டியிருப்பதாகச் சொன்ன அவர், இணையவழி மோசடிகளையும் சமாளிக்க வேண்டியுள்ளதாகக் கூறினார்.
சிங்கப்பூர் காவல்துறை இவ்வாண்டு அதன் 50ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
அதை முன்னிட்டு பொங்கோல் அக்கம்பக்கக் காவல் நிலையத்துக்கும் பொங்கோல் தீயணைப்பு நிலையத்துக்கும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) முதன்முறையாகச் சென்ற பிரதமர் வோங், அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.
காவல் நிலையத்தையும் தீயணைப்பு நிலையத்தையும் சுற்றிப் பார்த்த அவர், “சிங்கப்பூரின் பாதுகாப்புக்கு உள்துறைக்குழு அதிகாரிகள் முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். நாட்டின் பாதுகாப்பை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
அயராது உழைக்கும் அனைத்து சீருடைப் பிரிவுச் சேவையாளர்களுக்கும் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார்.
ஆளில்லா வானூர்திகள், தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் பயிற்சியறைகள் போன்ற அதிநவீன அம்சங்களையும் பிரதமர் வோங் பார்வையிட்டார்.
அந்த நிலையங்களுக்குச் சென்றதன் மூலம் உள்துறைக் குழு அதிகாரிகள் எப்படிச் செயல்படுகின்றனர் என்பதை தம்மால் தெரிந்துகொள்ள முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“கடந்த பல ஆண்டுகளாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் அடங்கிய உள்துறைக் குழு மீது சிங்கப்பூரர்கள் தொடர்ந்து அதிக நம்பிக்கை வைத்திருப்பதைப் பல ஆய்வுகள் காட்டுகின்றன,” என்றார் பிரதமர் வோங்.
அது தற்செயலாக நடக்கவில்லை என்றும் பல்லாண்டு கடின உழைப்பாலேயே அது சாத்தியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்து உள்துறைக் குழு அதிகாரிகளின் சேவை, தியாகம், துணிச்சல், அர்ப்பணிப்புக்கும் பிரதமர் வோங் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
பிரதமர் வோங்குடன் சேர்ந்து உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் உள்துறைக் குழுவின் தேசிய சேவையாளர்களைச் சந்தித்தார்.