வேர்களைப் போற்றுவதும் திறந்த மனப்பான்மையும் ஒன்றோடு ஒன்று முரண்படாது: ஸாக்கி முகம்மது

வேர்களைப் போற்றுவதும் திறந்த மனப்பான்மையும் ஒன்றோடு ஒன்று முரண்படாது: ஸாக்கி முகம்மது

படம்: அருண் பாலாஜி

25 Oct 2026 - 6:30 am

3 mins read

பள்ளிவாசல் சொத்துகளைச் சார்ந்த பண்புகளும் நோக்கங்களும் தொடர்ந்து நிலைக்கவேண்டும். அதே வேளையில், மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப அவை செயல்பட வேண்டும் என்று முஸ்லிம் விவகாரங்களுக்குத் தற்காலிகப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்தார்.

சனிக்கிழமை (அக்டோபர் 24) ‘ஜாமியா சூலியா ஹெரிட்டேஜ்’ (Jamae Chulia Heritage) திறப்பு விழாவில்  உரையாற்றிய திரு. ஸாக்கி, ஒவ்வொரு தலைமுறையினரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதைப் பாதுகாத்துப் புதுப்பிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.

அமானா எனப்படும் அறக்கட்டளைப் பொறுப்பு, நல்ல நிர்வாகத்தை உறுதிசெய்வதாகும் என்றார் அமைச்சர். 

“எது தொடர்ந்து நீடிக்க வேண்டும், எது மாற வேண்டும் என்பதை நம்பிக்கை மிகுந்த ஒரு சமூகம் அறிந்திருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

கிட்டத்தட்ட 300 சமூகத் தலைவர்கள், பங்காளிகளிடம் உரையாற்றிய திரு. ஸாக்கி, பாரம்பரியத்தை மதிப்பது என்பது எல்லாவற்றையும் அப்படியே வைத்திருப்பதைக் குறிக்காது என்றார். “வடிவம் மாறலாம். ஆனால் நோக்கம் நிலைத்திருக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆரம்பகால இந்திய முஸ்லிம் குடியேறிகள் சிங்கப்பூருக்கு மேற்கொண்ட மசாலாப் பொருள்கள் சார்ந்த வணிகப் பயணத்தைச் சித்திரிக்கும் சுவரோவியம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது.

மாஸ்க் ஸ்திரீட், பகோடா ஸ்திரீட் ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ள இந்த மேம்படுத்தப்பட்ட சொத்து, முந்தைய தலைமுறை முஸ்லிம்களால் பள்ளிவாசலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ‘வக்ஃப் (அறக்கட்டளை) நிலத்தில் அமைந்துள்ளது. 

இது ‘தி அஸ்காட் லிமிடெட்’ நிறுவனத்தால் ‘லைஃப் சைனாடவுன்’ (lyf Chinatown) என்ற பெயரில் நிர்வகிக்கப்படும் 90 அறைகளைக் கொண்ட சேவைக் குடியிருப்பைக் கொண்டுள்ளது.

இந்தத் திட்டம் பாரம்பரியம், விருந்தோம்பல், சமூக இடங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, எதிர்காலச் சந்ததியினருக்காக வக்ஃப் சொத்தின் பலன்களைத் தக்கவைப்பதாகச் சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் (முயிஸ்) குறிப்பிட்டது.

அறக்கட்டளைச் சொத்து மேலாண்மை நிறுவனமான வாரிஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸின் முழு உரிமையுடைய துணை நிறுவனமான ‘டபிள்யூஜே ஹெரிட்டேஜ் பிரைவிட் லிமிட்டட்’ நிறுவனம் இந்தச் சொத்தினை மேம்படுத்தியது.

முயிஸ் நிர்வகிக்கும் வக்ஃபுகளுடன் இணைந்து உருவாக்கப்பட்ட ‘ஜாமியா சூலியா ஹெரிட்டேஜ்’ வளாகம், வக்ஃப் புத்துருவாக்கத் திட்டத்தின்கீழ் (Wakaf Revitalisation Scheme) உருவாக்கப்பட்ட நான்காவது மேம்பாட்டுத் திட்டமாகும். 

வக்ஃப் சொத்துகள் அவற்றின் பயனாளிகளுக்கு நிரந்தரப் பலன்களை வழங்கும் நோக்கத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், மாறிவரும் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் புதுப்பிக்கப்படுவதற்கு இத்திட்டம் உதவுகிறது.

சூலியாக்கள் போன்ற ஆரம்பகால முஸ்லிம் குடியேறிகளால் நிறுவப்பட்ட வக்ஃப் ஜாமியா, நீண்டகாலமாக இருந்து வரும் ஜாமியா சூலியா பள்ளிவாசல், அல்-அப்ரார் பள்ளிவாசல், நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம் ஆகிய மூன்று இந்திய முஸ்லிம் அமைப்புகளைத் தொடர்ந்து ஆதரிக்கிறது.

இந்திய முஸ்லிம் சமூகத்தைச் சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க சமூகம் என்று வருணித்த வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக், அச்சமூகத்திற்கு இந்தத் திறப்பு விழா முக்கியமான தருணம் எனக் கூறினார்.

“இந்த வக்ஃப் சொத்துகளில் ஒன்றின் உருமாற்றத்தை ‘ஜாமியா சூலியா ஹெரிட்டேஜ்’ வளாகத் திறப்பு விழாவில் நாம் கொண்டாடுகிறோம். இது இன்றும் நாளையும் பல்வேறு அமைப்புகளுக்குத் தொடர்ந்து பலன் வழங்கும். மேலும், இது சமூகம் உண்மையிலேயே பெருமைப்படக்கூடிய ஒன்று என நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்