அதிக நோயாளிகளுக்கு மருத்துவமனைக்கு நிகரான பராமரிப்புச் சேவை இப்போது வழங்கப்பட்டு வருகிறது.
வீட்டில் நீக்குப்போக்கான பராமரிப்பு (எம்ஐசி@ஹோம்) எனும் திட்டம் விரிவுபடுத்தப்படுவதைத் தொடர்ந்து இந்நிலை உருவாகியுள்ளது. இத்திட்டம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படாதோருக்கும் கட்டங்கட்டமாக நீட்டிக்கப்படுகிறது.
தனியார் மருந்தகங்கள், பலதுறை மருந்தகங்கள், சமூகப் பராமரிப்புக் குழுக்கள், தாதிமை இல்லங்கள் ஆகியவற்றால் திட்டத்துக்கு அனுப்பப்பட்டோரும் பலனடைந்த நோயாளிகளில் அடங்குவர்.
2022ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சு எம்ஐசி@ஹோம் திட்டத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கியது. மருத்துவமனைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு குணமடைந்துவரும் நோயாளிகளுக்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறையைக் கையாள இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இத்திட்டத்தின் தங்களுக்கான வடிவமான என்யுஎச்எஸ்@ஹோம் (NUHS@Home) திட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட 7,000 நோயாளிகள் வீட்டில் கவனிக்கப்பட்டனர் என்று தேசிய பல்கலைக்கழக சுகாதார முறை (என்யுஎச்எஸ்) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) தெரிவித்தது.
சிங்கப்பூரின் மேற்குப் பகுதியிலுள்ள மக்களைக் கவனித்துக்கொள்ளும் குழுமமான என்யுஎச்எஸ், 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.
என்யுஎச்எஸ்@ஹோம் திட்டம் சென்ற ஆண்டிலிருந்து கட்டங்கட்டமாக மேலும் பலருக்கு விரிவுபடுத்தப்பட்டதாக அதன் ஐந்தாம் ஆண்டு நிறைவுவிழாவில் என்யுஎச்எஸ் குறிப்பிட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வரை சமூக நிலையங்கள் மூலம் தங்களிடம் அனுப்பப்பட்ட சுமார் 200 நோயாளிகள் திட்டத்தில் கவனித்துக்கொள்ளப்பட்டனர்.
என்டியுசி ஹெல்த் அமைப்பின் தாதிமை இல்லங்களிலிருந்து 56 பேரும் என்யுஎச்எஸ் சமூகப் பராமரிப்புக் குழுக்கள் அனுப்பிய 64 பேரும் அவர்களில் அடங்குவர். மற்றவர்கள் பலதுறை மருந்தகங்கள், தனியார் மருந்தகங்கள் ஆகியவற்றிலிருந்து அனுப்பப்பட்டவர்கள்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் இதர இரண்டு சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்களான சிங்ஹெல்த், என்எச்ஜி ஹெல்த் ஆகியவையும் இந்த வீட்டுப் பராமரிப்புத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளன.
சிங்ஹெல்த், சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் உள்ள மக்களைக் கவனித்துக்கொள்கிறது. அதேபோல் என்எச்ஜி ஹெல்த் மத்திய, வடக்கு வட்டாரங்களில் உள்ளவர்களைக் கவனித்துக்கொண்டு வருகிறது.
நிகழ்ச்சியில் பேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் கென்னத் மாக், வீட்டில் வழங்கப்படும் சுகாதாரப் பராமரிப்புச் சேவைத் திட்டத்தின்மீது நம்பிக்கை வைத்ததற்காக நோயாளிகள், அவர்கள் குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். திட்டத்துக்கு ஆதரவளித்த சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், பங்காளிகள் ஆகியோருக்கும் அவர் நன்றி கூறினார்.