தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹவ்காங் கத்திக்குத்து: ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு

2 mins read
5947e273-5a20-4593-87fa-2a77833d17fd
மாண்ட டாவ் தி ஹோங் (இடது), சந்தேக நபரான டூ ஸாய்சிங். - படங்கள்: சாவ்பாவ் / சாவ்பாவ் வாசகர்

ஹவ்காங் வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமையன்று நிகழ்ந்த (டிசம்பர் 10) கத்திக்குத்துத் தாக்குதலில் வியட்னாமைச் சேர்ந்த டாவ் தி ஹோங் என்ற மாது கொல்லப்பட்டார்.

அதன் தொடர்பில் வியாழக்கிழமையன்று (டிசம்பர் 12) ஆடவர் ஒருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அச்சம்பவத்தில் வேறோர் ஆடவர் காயமுற்றார்.

சந்தேக நபரான சீனாவைச் சேர்ந்த டூ ஸாய்சிங், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு வாசிக்கப்படும்போது காணொளி[Ϟ]வழி நீதிமன்றத்தில் முன்னிலையானார். கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

டூ தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேல்விசாரணைக்காக அவர் சம்பவ இடத்துக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்படக்கூடும்.

இந்த வழக்கு இம்மாதம் 19ம் தேதியன்று மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

42 வயது டூ செவ்வாய்க்கிழமை காலை 11.06 மணிக்கு கோவன் உணவங்காடிச் சந்தைக்கு அருகே உள்ள ‘குவான் லோங் நிப்பான் பெயின்ட் ஹார்டுவேர்’ கடையில் 34 வயது டாவ் தி ஹோங்கைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. திருவாட்டி ஹோங் அக்கடையில் வேலை செய்து வந்தார்.

காலை 11 மணியளவில் தாக்குதலுக்கு ஆளானவர் அலறியதைக் கேட்டதாகவும் ஆடவர் ஒருவர் கத்தி வைத்திருந்ததாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர். பிறகு திருவாட்டி ஹோங்கின் முதுகில் பல வெட்டுக் காயங்கள் காணப்பட்டன.

சந்தேக நபர், காயமுற்ற ஆடவர், திருவாட்டி ஹோங் மூவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். திருவாட்டி ஹோங், மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மரியாதை செலுத்த வந்த திருவாட்டி ஹோங்கின் சகோதரி (இடமிருந்து முன்றாவது) நிலைகுலைந்து காணப்பட்டார்.
மரியாதை செலுத்த வந்த திருவாட்டி ஹோங்கின் சகோதரி (இடமிருந்து முன்றாவது) நிலைகுலைந்து காணப்பட்டார். - படம்: சாவ்பாவ்

சம்பவம் நிகழ்ந்த கடைக்குப் பின்னால் திருவாட்டி ஹோங்கின் நண்பர்கள் புதன்கிழமையன்று (டிசம்பர் 11) தற்காலிக வழிபாட்டு இடத்தை அமைத்தனர். அங்கு அவர்கள் திருவாட்டி ஹோங்கிற்கு மரியாதை செலுத்தி மெழுகுவர்த்திகளும் அகர்பத்திகளும் ஏற்றி வைத்தனர்.

புதன்கிழமை மாலை சுமார் 7.20 மணிக்கு வியட்னாமிலிருந்து வந்த திருவாட்டி ஹோங்கின் சகோதரி அந்தத் தற்காலிக வழிபாட்டு இடத்துக்குச் சென்றார். சகோதரி நிலைகுலைந்து காணப்பட்டார்.

இச்சம்பவம், 2024ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நிகழ்ந்திருக்கும் 10வது கொலைச் சம்பவம் அல்லது கொலை என்று சந்தேகிக்கப்படும் சம்பவமாகும். மேலும், ஹவ்காங் தாக்குதல், கடந்த இரு வாரங்களுக்குள் நிகழ்ந்த மூன்றாவது அத்தகைய சம்பவமாகும்.

குறிப்புச் சொற்கள்