சிங்கப்பூரில் அண்மையில் கிண்டர்லேண்ட் பாலர் பள்ளிகளில் சிறாரை ஆசிரியர்கள் துன்புறுத்திய சம்பவங்களைக் காட்டும் காணொளிகள் பெற்றோர்க்கு அதிர்ச்சி அளித்தன.
என்ன நடந்தது என்று வீட்டில் வந்து சொல்லத் தெரியாத குழந்தைகளின் பெற்றோர் இதுகுறித்து மிகுந்த கவலை தெரிவித்தனர்.
ஒரு குழந்தை துன்புறுத்தலுக்கு ஆளாவதை உரிய நேரத்தில் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை இத்தகைய சம்பவங்கள் உணர்த்துவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
உடலில் ஏற்படும் காயங்கள் கண்ணுக்குத் தெரியக்கூடியவை. அவற்றுக்கு அப்பால், பிள்ளைகள் உணர்வுரீதியாகவும் பாதிக்கப்படக்கூடும். உரத்த குரலில் திட்டுதல், அச்சுறுத்தல், குழந்தையை விமர்சித்தல் போன்றவற்றை அவர்கள் சுட்டினர்.
சிறப்புத் தேவையுடைய குழந்தைகளும் இன்னும் பேசத் தெரியாத பிள்ளைகளும் இத்தகையோரால் எளிதில் பாதிக்கப்படும் சாத்தியம் அதிகம் என்று வல்லுநர்கள் குறிப்பிட்டனர்.
முறையான பயிற்சி பெறாத ஆசிரியர், சிறப்புத் தேவையுடைய குழந்தையின் நடத்தையைத் தவறாகப் புரிந்துகொள்ள நேரிடும். அது அக்குழந்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.
துன்புறுத்தலால் சிறு பிள்ளைகள் உளரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுவதால், உரிய ஆதரவு கிடைக்காவிட்டால் அவர்கள் வளர்ந்த பிறகும் அதன் தாக்கம் அவர்களிடம் நிலைத்திருக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.
துன்புறுத்தலின் தீவிரம், அது எவ்வளவு நாள் நீடித்தது என்பதைப் பொறுத்து அதன் தாக்கம் அமையும் எனக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
நாளாக, ஆக, அப்பிள்ளைகள் வலுவற்றவர்களாகவும் கையறு நிலையில் இருப்பதாகவும் உணரக்கூடும். தங்களைச் சுற்றியுள்ளோர் வலியவர்கள், ஆபத்தானவர்கள் என்று கருதும் அவர்கள், உலகம் பாதுகாப்பற்றது, கணிக்க இயலாதது என்று கருதக்கூடும்.
துன்புறுத்தல் அவர்களின் தன்னம்பிக்கையைக் குலைக்கும். மனஅழுத்தம், கவலை, அச்சம் ஆகியவற்றால் பாதிக்கப்படுவர். அதனால் எதிர்காலத்தில் உறவுகளில் அவர்கள் சிக்கலை எதிர்கொள்வர் என்று வல்லுநர்கள் எடுத்துரைத்தனர்.
துன்புறுத்தலைப் பார்க்கும் பிள்ளைகளும் பாதிக்கப்படுவர். அச்சம், குழப்பம், பாதுகாப்பின்மை எனக் கலவையான உணர்வுகளுக்கு ஆளாவர் என்று கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் சில அறிகுறிகளை நாம் காணமுடியும் என்கின்றனர் வல்லுநர்கள். சொல்லத் தெரியாவிட்டாலும் அவர்கள் நடத்தையில் மாற்றம் இருக்கும்.
எடுத்துக்காட்டாக, பள்ளிக்குக் கிளம்பும் நேரத்தில் சில பிள்ளைகள் அழுவர்.
கற்பனையான விளையாட்டின்போது அவர்கள் வன்முறைச் செய்கையை வெளிப்படுத்துவர். எதிர்பாராமல் யாரும் தொட்டால் அதீத அதிர்ச்சிக்கு ஆளாவர்.
வயிற்று வலி, தலைவலி என்று கூறுவர். இதயத் துடிப்பு அதிகரித்தல், இரவில் தூங்குவதில் சிரமம், பயங்கரக் கனவுகள், கவனிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்படும்.
சில சம்பவங்களைப் பற்றிப் பேசவோ சிந்திக்கவோ விரும்பாமல் அழுகையை வெளிப்படுத்துவர்.
இத்தகைய வழக்கமற்ற நடத்தையைக் கண்ணுறும் பெற்றோர் அதுகுறித்துத் தீர விசாரிக்க வேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

