ஃபாரம் கடைத்தொகுதி, வோகோ, ஹெச்பிஎல் ஹவுஸ் மூன்றையும் கூட்டாக மேம்படுத்த அனுமதி

2 mins read
8b7830b0-b711-44c3-936b-8894b14b6dd2
மொத்தம் 114,153.38 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பில் ஹோட்டலும் வீடுகளும் கொண்ட இரண்டு கட்டடங்கள் கட்டப்படும்.  - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஃபாரம் கடைத்தொகுதி, வோகோ ஆர்ச்சர்ட் சிங்கப்பூர், ஹெச்பிஎல் ஹவுஸ் ஆகிய மூன்றையும் பலபயன் வளாகமாக உருவாக்க ஹோட்டல் புராபர்ட்டிஸ் நிறுவனத்திற்கு (ஹெச்பிஎல்) நகர மறுசீரமைப்பு ஆணையம் அனுமதி அளித்திருக்கிறது.

மொத்தம் 114,153.38 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பில் ஹோட்டலும் வீடுகளும் கொண்ட இரண்டு கட்டடங்கள் கட்டப்படும். அங்கு கடைகளும் அலுவலக இடங்களும் இருக்கும் என நிறுவனம் திங்கட்கிழமை தெரிவித்தது.

ஆர்ச்சர்ட் சாலை, கஸ்கடன் சாலை முனையில் அமைந்துள்ள நிலப்பகுதிகளின் மேம்பாடு குறித்து ஆணையத்திற்கு உத்தேசப் பரிந்துரை கிடைத்திருப்பதாக பிசினஸ் டைம்ஸ் செய்தித்தாள் ஜூன் மாதம் செய்தி வெளியிட்டது.

இந்த மேம்பாட்டுப் பணியை ஹெச்பிஎல் நிறுவனம் மேற்கொள்ளும் என்று இருபது ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருகிறது.

தனது சொத்துகளில் மேம்படுத்தக்கூடியவற்றை அடையாளம் காண இடைக்கால அனுமதிக்கு விண்ணப்பம் செய்திருந்ததாக நிறுவனம் திங்கட்கிழமை தெரிவித்தது.

ஆணையத்திடம் பரிந்துரைக்கப்பட்ட திட்டத்தின்கீழ், அந்த நிலப்பகுதியில் மூன்று கட்டடங்கள் கட்டப்படும். ஆக உயரமான கட்டடம் 64 மாடிகளைக் கொண்டிருக்கும். கூரைத் தோட்டம், மேடை நிகழ்ச்சிகள் படைப்பதற்கான அரங்கம், கீழ்மாடி வாகன நிறுத்துமிடம் கொண்ட ஆறு மாடி கட்டடமும் திட்டமிடப்படுகிறது.

“இந்தப் பரிந்துரை அமலாகி பூர்த்தி அடைந்தால், ஆர்ச்சர்ட் சாலையின் இப்பகுதி துடிப்பான, முக்கியமான ஒரு பகுதியாக உருமாறும்,” என்று ஹெச்பிஎல் கூறியது.

“ஆர்ச்சர்ட் சாலையில் இப்பகுதிக்கும் பக்கத்திலுள்ள கட்டடங்களுக்கும் இடையில் இணைப்பை வழங்கும் நுழைவாயிலாக” புதிய மேம்பாடு திகழும் என்று எதிர்பார்ப்பதாகவும் நிறுவனம் குறிப்பிட்டது.

பழைய கட்டடங்களைப் புதிய கட்டடங்களாக மறுமேம்பாடு செய்வதை ஊக்குவிக்கும் ஆணையத்தின் உத்திபூர்வ மேம்பாடு ஊக்கத் திட்டத்தின்கீழ் நிறுவனம் பரிந்துரையைச் சமர்ப்பித்தது.

ஆணையம் பரிந்துரைக்கு அனுமதி அளித்திருப்பதால், விரிவான திட்டங்களை நிறுவனமும் அதன் ஆலோசகர்களும் வகுத்து வருகின்றனர். மறுமேம்பாட்டுக்கான காலத்திட்டம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்