ஷென்டன் வே பகுதியில் அமைந்துள்ள ‘ஷென்டன் ஹவுஸ்’ மூன்றாவது முறையாக ஒட்டுமொத்த விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.
சென்றமுறை அறிவிக்கப்பட்ட $590 மில்லியனே இப்போதும் விற்பனை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த விலையை 8.5 விழுக்காடு குறைத்து $538 மில்லியனாகத் திருத்தத் திட்டமிடுவதாகவும் உரிமையாளர்கள் கூறினர்.
ஏறத்தாழ 50 விழுக்காட்டு உரிமையாளர்கள் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். அதற்கான கூடுதல் கூட்டு ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட்டுள்ளதாக வர்த்தகச் சொத்து முகவரான ‘ஜெஎல்எல்’ நிறுவனம் கூறியது.
இருப்பினும் குறைந்தபட்சம் 80 விழுக்காட்டு உரிமையாளர்களின் ஆதரவு தேவை என்பதை அது சுட்டியது.
வர்த்தகப் பயன்பாட்டுக்காக 99 ஆண்டு குத்தகைத் திட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்டுள்ள ஷென்டன் ஹவுஸ் கட்டடம் 36,250 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.
முன்னதாக, கடந்த 2012 ஆம் ஆண்டு அது $530 மில்லியனுக்கு ஒட்டுமொத்த விற்பனைக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
ஷென்டன் ஹவுசுக்கான ஏலக்குத்தகைக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பிக்கலாம்.