கடன் பற்று அட்டை மோசடி; 6 முறை ஏமாற்றப்பட்ட சிங்கப்பூர் மருத்துவர்

1 mins read
7b285912-99ec-49b2-b8eb-a48cf12521a5
மொத்தம் $3,600க்கும் மேற்பட்ட தொகையை டாக்டர் ஸீனா லிம்மின் வங்கிக் கணக்கிலிருந்து மோசடிக்காரர்கள் திருடினர். - படம்: சாவ்பாவ்

ஏப்ரல் மாதத்தில் ஏர் ஏஷியா நிறுவனத்திற்கு தனது கடன் பற்று அட்டை மூலம் $1,060க்கு மேற்பட்ட தொகை பரிவர்த்தனை செய்யப்பட்டதை அறிந்த கண் மருத்துவர் ஸீனா லிம் அதிர்ச்சியுற்றார்.

அவருடைய அனுமதி இன்றி அந்தப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதையடுத்து அவர் தனது கடன் பற்று அட்டையைப் புதிதாக மாற்றினார். ஆனால் மே மாதத்திலும், அவருடைய கடன் பற்று அட்டை விவரங்களைப் பயன்படுத்தி யாரோ ஏர் ஏஷியாவிற்கு கட்டணம் செலுத்தியிருந்தனர்.

மேலும் இருமுறை கடன் பற்று அட்டையை மாற்றியும் பயனில்லை. இவ்வகையில் மலேசிய ரிங்கிட்டிலும் அமெரிக்க டாலரிலும் மொத்தம் $3,600 மதிப்பிலான தொகையை டாக்டர் லிம்மின் வங்கிக் கணக்கில் இருந்து மோசடிக்காரர்கள் எடுத்துள்ளனர்.

ஆறு முறை அவர்கள் கட்டணம் செலுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. ஏமாற்றப்பட்ட தொகை டாக்டர் லிம்மின் யுஓபி வங்கிக் கணக்குக்கு மீண்டும் செலுத்தப்பட்டாலும், இத்தகைய மோசடி எவ்வாறு நிகழ்ந்தது என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

சம்பவம் குறித்து சிங்கப்பூர் நாணய ஆணையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. வங்கி, டாக்டர் லிம்மிற்கு உதவியதாகவும் தேவையேற்பட்டால் விசாரணையிலும் உதவவிருப்பதாகவும் யுஓபி வங்கியின் பேச்சாளர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்