பொதுமக்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹியூம் ரயில் நிலையம் வரும் 2025ம் இரண்டாம் காலாண்டில் திறக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் அறிவித்துள்ளார்.
மக்களுக்கு வசதியான பயணங்களை வழங்கும் நோக்கில் விரிவடைந்து வரும் ரயில் சேவை இணைப்புகள் குறித்து செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றினார் அமைச்சர் சீ.
“அடுத்த சில ஆண்டுகளில் ரயில் சேவை இணைப்புகளை மேலும் விரிவாக்கம் செய்கிறோம். இன்னும் சில மாதங்களில் ஹியூம் நிலையம் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளதால், பயணிகள் கூடுதல் பயணத் தெரிவுகளை நாடிடலாம்,” என்றார் அமைச்சர்.
டௌன்டவுன் வழித்தடத்தில், அப்பர் புக்கிட் தீமா ரோட்டிற்கும் பியூட்டி வேர்ல்ட் நிலையத்திற்கும் இடையே அமைக்கப்படும் புதிய ஹியூம் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 2021 முதல் நடைபெற்று வருகிறது.
புதிய நிலையம் பயன்பாட்டிற்கு வரும்போது, ஹியூம் குடியிருப்பாளர்கள் பூமலை, டௌன்டவுன் பாதை, உட்லண்ட்ஸ் சவுத் போன்ற இடங்களை 15 முதல் 25 நிமிடங்களுக்குக் குறைவான பயண நேரத்தில் சென்றடைய முடியும்.
இதனிடையே, மக்களுக்கு சௌகரியமான பயணங்களை வழங்கும் நோக்கில் அமைச்சு மேற்கொண்டு வரும் இதர திட்டங்கள் குறித்த விவரங்களையும் அமைச்சர் சீ பகிர்ந்தார்.
அவ்வகையில், பொங்கோல் கோஸ்ட் நிலையம், இன்னும் சில தினங்களில் அதாவது டிசம்பர் 10ஆம் தேதி பயணிகளுக்கு திறந்துவிடப்படும் என்றார் திரு சீ. இந்த நிலையம் வடக்கு-கிழக்கு ரயில் பாதையில் அமைந்துள்ளது.
தரமான சேவைகள் வழங்குவதில் தொடர் கவனம்
ரயில் கட்டமைப்பு சேவைகள் தொடர்ந்து வளர்ச்சிப் பெற்று வருவதைக் குறிப்பிட்டு உரையாற்றிய அமைச்சர், தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையின் விரிவாக்கம் குறித்தும் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்த ஆண்டு ஜூன் மாதம் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் தடத்தின் 4ஆம் கட்ட ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டன. அடுத்ததாக பேஷோர், சுங்கை பிடோக் வரையிலான பாதைகளை இணைக்கும் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையின் 5வது கட்ட விரிவாக்கம் 2026க்குள் நிறைவு செய்யப்படும்,” என்று விவரித்தார் திரு சீ.
சேவைத் தடையில்லாமல் ரயில்கள் இயக்கப்பட்ட தூரம் குறித்த தரவுகளைப் பகிர்ந்த திரு சீ, “பல ஆண்டுகளாக நம்பகத்தன்மையை மேம்படுத்தியுள்ளோம். சேவைத் தடங்கலின்றி ரயில்கள் இயக்கப்பட்ட தூரம் 2012ல் 67,000 கிலோமீட்டராக இருந்தது.
“2019 முதல் அது 1 மில்லியன் ரயில் கிலோமீட்டர் எனும் நிலையை எட்டியது. அத்தரத்தை நாம் தொடர்ந்து தக்கவைத்துள்ளோம்,” என்றார் திரு சீ.
நவம்பர் 2024 இறுதி வரையிலான 12 மாத காலத்திற்கு சுமார் 2.2 மில்லியன் ரயில்-கிமீ தூரத்தை மொத்த எம்ஆர்டி இணைப்பு எட்டியுள்ளது என்று அமைச்சர் சீ மேலும் தெரிவித்தார்.
எம்ஆர்டி இணைப்புகள் கட்டமைப்பு மற்றும் விரிவாக்கம் தொடர்பிலான பணிகள் இன்னும் முடியவில்லை என்றும் புதிய சாத்தியக்கூறுகளை அமைச்சு தொடர்ந்து ஆராய்ந்து வரும் என்றும் சுட்டிய திரு சீ, நம்பகத்தன்மை மிகுந்த ரயில் சேவைகளை எவ்வாறு வலுப்படுத்தலாம் என்பது குறித்து தொடர் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.