அரும்பொருளக இயக்குநர் சுங் மே குவென்

அரும்பொருளகம் தலைமுறைகளுக்கிடையே உரையாடலை ஊக்குவிக்க வேண்டும்

3 mins read
03b5dd81-0412-40ce-9c75-4d0a3988259b
தேசிய அரும்பொருளக இயக்குநர் சுங் மே குவென். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தின் ‘விளையாடு: தேதி’ (Play:Date) என்ற அண்மைய கண்காட்சியில் மெக்டானல்ட் பொம்மைகளும் பார்பி பொம்மைகளும் இடம்பெற்றிருந்தன.

மில்லேனிய தலைமுறையினருக்கும் இந்தப் பொம்மைகள் பழக்கமாக இருக்கலாம், ஆனால் அவர்களுக்குத் பிந்திய இளம் தலைமுறையினருக்கு இப்பொம்மைகள் அறிமுகமில்லாதவை.

இந்த பொம்மைகளின் காட்சி பெற்றோர்- பிள்ளைகள் அல்லது தாத்தா பாட்டி - பேரக்குழந்தைகளுக்கு இடையிலான உரையாடல்களை வளர்க்கும் என்று கூறினார் அரும்பொருளக இயக்குநர் சுங் மே குவென்.

தங்கள் தாத்தா பாட்டிகளை எங்காவது அழைத்துச் செல்ல விரும்பும் குடும்பங்களின் முதல் தேர்வாக அரும்பொருளகம் இருக்க வேண்டும் என்று திருவாட்டி சுங் விரும்புகிறார்.

அண்மைய கால வரலாற்றில் இதுபோன்ற காட்சிப்பொருள்கள் மக்களுடன் தொடர்புபடுத்தக்கூடியவை. வெவ்வேறு தலைமுறை தங்கள் அனுபவங்களைப் பற்றி உரையாடுவதற்கும் பேசுவதற்கும் வாய்ப்புகளை வழங்குகின்றன என்றார் அவர்.

கடந்த 2019 செப்டம்பரில் 136 ஆண்டு பழமையான தேசிய அரும்பொருளகத்தின் இயக்குநராகப் பதவியேற்ற திருவாட்டி சுங், தேசிய அரும்பொருளகம் சிங்கப்பூரர்களுடன் தொடர்ந்து தொடர்புபடுத்தக்கூடியதாக இருக்க, இத்தகைய கண்காட்சிகள் உதவும் எனக் கருதுகிறார்.

அரும்பொருளகத்தின் இத்தகைய கண்காட்சிகள், நிரந்தரக் காட்சிக்கூடங்களின் புதுப்பித்தல் பணிகள் பற்றி அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசினார்.

சமகால பொருள்கள் எவ்வாறு தலைமுறைகளை ஒன்றிணைக்க முடியும் என்பதைக் காட்டிய மற்றொரு கண்காட்சி 2022ஆம் ஆண்டில் இடம்பெற்ற தொழில்நுட்பம் குறித்த கண்காட்சி என்று திருவாட்டி சுங் கூறினார்.

புத்தாக்கத் தொழில்நுட்பம் முதல், எம்பி3 பிளேயர், ஒரு காலத்தில் எங்கும் காணப்பட்ட ஆரஞ்சு வண்ண பொதுத்தொலைபேசி போன்ற காட்சிப் பொருள்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

அரும்பொருளகம் மேலும் பரவலாக பலரை ஈர்ப்பதற்கு ஒரு முக்கிய வழியாக அவர் இத்தகைய கண்காட்சிகளைக் கருதுகிறார்.

அவரது பொறுப்பின் கீழ், சமகால பொருள்கள், கதைகளைச் சேகரிக்கும் அல்லது ஆவணப்படுத்தும் முயற்சிகளையும் தேசிய அரும்பொருளகம் முடுக்கிவிட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுநோயின் போது, அரும்பொருளகமும் தேசிய நூலக வாரியமும் சமகால சிங்கப்பூரை ஆவணப்படுத்தும் முயற்சியைத் தொடங்கின. தொற்றுநோய் தொடர்பான பொருள்கள், கதைகளை வழங்க பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

அவர் அரும்பொருளகத்தை பொறுப்பேற்ற சில மாதங்களில் தாக்கிய தொற்றுநோய் பரவலின்போது, திருவாட்டி சுங், ஐந்து புகைப்படக் கலைஞர்களையும் இரண்டு திரைப்படத் தயாரிப்பாளர்களையும் கொண்டு, அவசரகால முடக்கநிலையை சிங்கப்பூரர்கள் எவ்வாறு நிர்வகிக்கிறார்கள் என்பதை ஆவணப்படுத்தினார்.

அப்போது சேகரிக்கப்பட்டப் பொருள்களில், 2020ஆம் ஆண்டு டிசம்பர் 30 அன்று தேசிய தொற்றுநோய் நிலையத்தின் மூத்த தாதி சாரா லிம்முக்கு சிங்கப்பூரில் போடப்பட்ட முதல் ஃபைசர்- பயோஎன்டெக் கோவிட்-19 தடுப்பூசியும் அடக்கம். 2021 பிப்ரவரி முதல் அக்டோபர் வரை நடைபெற்ற தொற்றுநோயைச் சித்தரிக்கும் கண்காட்சியில் இது இடம்பெற்றது.

நினைவுகளைத் தூண்டும் இத்தகைய முயற்சிகள் அதிகம் சிந்திக்க வைக்கும் அல்லது கல்வி புகட்டும் வழிகளைத் தவிர்க்க வழிவகுப்பதாக சில விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்துக் கருத்துரைத்த திருவாட்டி சுங், “கதையைச் சொல்வதற்கு ஒரு வழியை மட்டும் கடைப்பிடிப்பதில்லை என்பதை அரும்பொருளகம் கவனத்தில் கொண்டுள்ளது,” என்றார்.

கல்வியியல் சார்ந்த கண்காட்சிக்கு எடுத்துக்காட்டாக 2022ஆம் ஆண்டின் இரண்டாம் உலகப் போர் கண்காட்சியைக் குறிப்பிட்ட அவர், அது அதிக உள்ளடக்கம், ஆய்வைக் கொண்டிருந்தது என்றார்.

அரும்பொருளகத்தின் மறுசீரமைப்புப் பணிகள் 2023 செப்டம்பரில் தொடங்கியது. இரண்டாம் தளத்திலுள்ள ஐந்து காட்சியகங்கள் சீரமைக்கப்படுகின்றன. 2026ஆம் ஆண்டில் அவற்றை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

காட்டின் வரலாற்றைக்கூறும் மின்னிலக்க, வட்டக் கண்ணாடிக் காட்சியகம் இவ்வாண்டு அக்டோபரில் மூடப்பட்டு 2025இல் மீண்டும் திறக்கப்படும்.

சிங்கப்பூர் பொன்விழாவையொட்டி கடைசியாக 2015ல் வரலாற்றுக் காட்சிக்கூடம் புதுப்பிக்கப்பட்டது.

“வரலாறு ஒவ்வொருநாளும் வெளிப்பட்டு வருகிறது, ஒரு குறிப்பிட்ட மைல்கல்லில் மட்டும் நிறுத்த முடியாது,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்