சிங்கப்பூருக்கு கஞ்சாவைக் கடத்திவர மேற்கொண்ட முயற்சியைக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய (ஐசிஏ) அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
அஞ்சல் பொட்டலச் சேவைப் பிரிவில் பணியாற்றும் ஆணையத்தின் அதிகாரிகள், மே 11ஆம் தேதி, வெளிநாட்டிலிருந்து வந்த பொட்டலத்தை மின்வருடி மூலம் சோதித்தபோது சந்தேகத்துக்குரிய பொருள்களைக் கண்டதாக ஆணையம் ஜூன் 13ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.
அது பயணப் பை என்று தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
கூடுதல் சோதனையில், தாவரப் பொருள்கள் அடங்கிய இரண்டு பொட்டலங்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்தப் பொட்டலங்கள், ‘வேக்கியூம் சீலிங்’ முறையில் உள்ளிருக்கும் காற்றை வெளியேற்றியபின் மூடப்பட்டிருந்தன.
முதற்கட்ட விசாரணையில், அப்பொட்டலங்களில் கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிற்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியது.
சிங்கப்பூரில் கஞ்சா தடை செய்யப்பட்ட போதைப்பொருளாகும்.
தொடர்புடைய செய்திகள்
அத்தகைய தடைசெய்யப்பட்ட போதைப்பொருளைக் கடத்துவது, வைத்திருப்பது, பயன்படுத்துவது, இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்வது குற்றமாகும்.
500 கிராமுக்கு அதிகமான கஞ்சாவைக் கடத்தியதாக நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படும்.

