குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய கண்ணன் மோரிஸ் ராஜகோபால் ஜெயராம், ஆடவர் அறுவரிடம் பாலியல் சுகத்தை லஞ்சமாகப் பெற்றது தொடர்பான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
அந்த அறுவரின் குறுகிய கால வருகையாளர் அட்டைக்கான விண்ணப்பத்தை அங்கீகரிப்பதில் கண்ணன் உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதற்கு ஈடாக அவர்களிடமிருந்து பாலியல் சுகத்தை அவர் லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்பட்டது.
சிங்கப்பூரரான 55 வயது கண்ணன், 2022ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடையே அந்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன் தொடர்பில் சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் மூன்றை, நேற்று (ஜூலை 29) அவர் ஒப்புக்கொண்டார். அந்த மூன்று குற்றச்சாட்டுகளிலும் தொடர்புடைய ஆடவர்கள் மூவரும் இந்திய நாட்டவர்கள்.
அந்த ஆடவர்கள் 25 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
மேலும் மூவர் தொடர்பான இதேபோன்ற குற்றச்சாட்டுகள் கண்ணனுக்குத் தண்டனை விதிக்கும்போது கருத்தில் கொள்ளப்படும்.
ஆணையம் 2023ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், கண்ணன் அந்த ஆண்டு ஏப்ரலில் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தது. அவர் பணியில் தொடர்கிறாரா என்று அறிய ஆணையத்தைத் தொடர்பு கொண்டிருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
கண்ணன், 1996ஆம் ஆண்டு ஆணையத்தில் ஊழியராகச் சேர்ந்தார். 2018ஆம் ஆண்டு ஆணையத்தின் வருகையாளர் அட்டை வழங்கும் பிரிவில் குழுத் தலைவராகப் பணியாற்றினார். பதவி உயர்வுகளுக்குப் பிறகு 2021ல் ஆய்வாளராகப் பொறுப்பேற்றார்.
தொடர்புடைய செய்திகள்
விருந்தோம்பல் துறையில் கல்வி பயில விரும்பிய 26 வயது இந்திய நாட்டவரின் மாணவர் விசா முடிவடைந்ததால் அவர் மீண்டும் மீண்டும் குறுகிய கால வருகையாளர் விசாவுக்கு விண்ணப்பிக்க நேர்ந்தது.
அந்த ஆடவரின் விசா நீட்டிப்புக்கு உதவியதற்குக் கைம்மாறாக கண்ணன் அவரைப் பாலியல் செய்கைகளில் ஈடுபட வலியுறுத்தியதாகத் தெரிகிறது. விசா நிராகரிக்கப்படலாம் என்று அஞ்சிய ஆடவர் அதற்கு ஒப்புக்கொண்டார்.
வெளிநாட்டவர் மேலும் ஐவரிடம் கண்ணன் இதேபோன்று நடந்துகொண்டார். அவரது குற்றச்செயல்கள் எவ்வாறு வெளிச்சத்துக்கு வந்தன என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
வழக்கில், ஆகஸ்டு 18ஆம் தேதி கண்ணனுக்குத் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.