குடிநுழைவுச் சலுகைக்கு லஞ்சமாக பாலியல் சுகம் பெற்ற அதிகாரிக்கு 22 மாதச் சிறை

2 mins read
e9af1590-911c-4048-b7bb-aa70fbb80b49
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கண்ணன் மோரிஸ் ராஜகோபால் ஜெயராம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாலியல் சுகத்தை லஞ்சமாகப் பெற்ற குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய அதிகாரி ஒருவருக்கு நீதிமன்றம் 22 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது.

கண்ணன் மோரிஸ் ராஜகோபால் ஜெயராம், 55, எனப்படும் அந்த சிங்கப்பூரர் குற்றவாளி என்று கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டதும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியதாக ஆணையம் கூறியது.

குறுகிய கால அனுமதி அட்டை விண்ணப்பதாரர்களுக்குச் சாதகமான பணிகளைச் செய்வதற்கு லஞ்சமாகப் பாலியல் செய்கைகளைப் பெற்றதாகச் சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை கண்ணன் ஒப்புக்கொண்டார்.

1996ஆம் ஆண்டு ஆணையத்தில் வேலைக்குச் சேர்ந்த அவர், 2021 ஜூன் மாதம் ஆய்வாளர் ஆனார். வருகையாளர் அட்டை அனுமதிப் பிரிவின் தலைவராகவும் அவர் இருந்தார்.

சிங்கப்பூரில் தங்களது வருகையை நீட்டிக்கக் கோரும் வெளிநாட்டினரின் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பது தொடர்பாக 10 அல்லது 11 அதிகாரிகளின் பணிகளை அவர் மேற்பார்வை செய்து வந்தார்.

அந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்து வருகை நீட்டிப்புக்கு அனுமதி வழங்கும் அல்லது நிராகரிக்கும் முடிவை எடுக்கும் அதிகாரத்திலும் கண்ணன் இருந்தார்.

இந்தியாவைச் சேர்ந்த 25க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று ஆடவர்கள் படிப்பதற்காக சிங்கப்பூர் வந்ததாகவும் குடிநுழைவுச் சலுகைகளுக்கு லஞ்சமாக அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக தமது வீட்டில் பாலியல் சுகத்தை அனுபவித்ததாகவும் நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

அந்த மூன்று ஆடவர்களில் 25 வயது ஆடவரின் வருகை அனுமதி முடிந்து சட்டவிரோதக் குடியேறியாகிவிட்டபோதிலும் அவரது விசாவை இருவாரம் நீட்டிக்க கண்ணன் அனுமதி அளித்ததாகவும் அவை தெரிவித்தன.

அதற்குக் கைம்மாறாக கண்ணன் அவரைப் பாலியல் செய்கைகளில் ஈடுபட வலியுறுத்தியதாகத் தெரிகிறது. விசா நிராகரிக்கப்படலாம் என்று அஞ்சிய ஆடவர் அதற்கு ஒப்புக்கொண்டார்.

கண்ணனின் குற்றச்செயல்கள் எவ்வாறு வெளிச்சத்துக்கு வந்தன என்பதை நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.

தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை வரும் வியாழக்கிழமை (செப்டம்பர் 18) முதல் தொடங்க அனுமதிக்க வேண்டுமென கண்ணன் விடுத்த கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்