தஞ்சோங் பகார் பிளாசாவில் உள்ள சில அழகுப் பராமரிப்பு, உடல்பிடிப்புச் சேவைக் கடைகளில் சட்டவிரோதச் செயல்கள் இடம்பெறுவது குறித்துக் கவலை நிலவுகிறது.
இந்நிலையில், டிபிபி (TPP) என்றழைக்கப்படும் தஞ்சோங் பகார் பிளாசாவுக்குப் புத்துயிரூட்டும் முயற்சிகளைத் தீவிரப்படுத்த தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ செசியாங் உறுதியளித்துள்ளார்.
டிபிபியில் அத்தகைய சட்டவிரோதச் செயல்கள் இடம்பெறும் கடைகள் அதிகம் இருப்பது குறித்துக் குடியிருப்பாளர்கள் தம்மிடம் கவலை தெரிவித்திருப்பதாக திரு ஃபூ கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 20) ஃபேஸ்புக்கில் தெரிவித்தார். குறிப்பாகப் பிள்ளைகளைக் கருத்தில்கொண்டு அவர்கள் கவலை தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
“அக்கடைத்தொகுதியில் பல பாலர்பள்ளிகள் இருக்கின்றன. அதனால் தங்கள் பிள்ளைகள் அத்தகைய கடைகளைத் தாண்டிச் செல்லும்போது பெற்றோர் கவலைகொள்கின்றனர்,” என்றார் திரு ஃபூ.
பிரச்சினையைக் கையாளும் நோக்கில் காவல்துறை, வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக), தஞ்சோங் பகார் பிளாசா வர்த்தகர்கள் சங்கம், நகர மன்றம் ஆகிய அமைப்புகளுடன் சந்திப்பு நடத்தி டிபிபி சில்லறை வர்த்தகக் கடைகளை மாற்றியமைப்பது குறித்துக் கலந்து ஆலோசித்திருக்கிறார்.
டிபிபியில் குறைந்தது நான்கு பாலர்பள்ளிகளும் துணைப்பாடக் கல்வி நிலையங்களும் இருப்பதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. டிபிபி, தஞ்சோங் பகார் பெருவிரைவு ரயில் நிலையத்திலிருந்து ஐந்து நிமிடங்களில் நடந்து செல்லக்கூடிய தூரத்தில் அமைந்துள்ளது.
திங்கட்கிழமை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் டிபிபிக்கு நேரில் சென்று பார்வையிட்டது. அங்கு முதல் தளத்தில் அழகு, நகப் பராமரிப்புச் சேவைகளை வழங்கும் 17 கடைகள் இருப்பதை அது கண்டது. மேலும், நான்கு கடைகளில் உடல்பிடிப்புச் சேவைகள் வழங்கப்படுவதையும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டது.
முதல் தளத்தில் செயல்பாட்டில் இருக்கும் கிட்டத்தட்ட 60 கடைகளில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்குக்கும் மேலானவை அத்தகைய கடைகளாகும்.
தொடர்புடைய செய்திகள்
இரண்டாவது தளத்தில் உள்ள 30க்கும் மேலான கடைகளில் சுமார் 20, தலைமுடி, அழகுப் பராமரிப்பு அல்லது உடல்பிடிப்புச் சேவை வழங்கும் கடைகளாகும்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாகக் காவல்துறையினர் டிபிபியில் சோதனைகளையும் முறியடிப்பு நடவடிக்கைகளையும் அதிகரித்திருப்பதாகத் திரு ஃபூ தெரிவித்தார். சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் சொன்னார்.
வருங்காலத்தில் காவல்துறை, டிபிபியில் சோதனைகளை அதிகரிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.