கடந்த வாரம் சட்ட விரோதமாக எல்லை கடந்த வாடகை கார் சேவை வழங்கிய ஓட்டுநர்கள் எட்டுப் பேர் பிடிபட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அது கூறியது.
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 30) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தரைவழிச் சோதனைச் சாவடிகளில் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டது.
தேசிய தனியார் வாடகை வாகனச் சங்கமும் தேசிய டாக்சி சங்கமும் அளித்த தகவல்களின் அடிப்படையில் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அது சொன்னது.
போக்குவரத்து மூத்த துணையமைச்சர் சுன் ஷுவெலிங், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், பயணிகள் வாகனங்களில் ஏறி, இறங்குவதற்குக் கூடுதலான இடங்களைப் பரிந்துரைப்பதன் தொடர்பில் ஆணையம் மலேசிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகக் குறிப்பிட்டார்.
மேலும், எல்லை கடந்த வாகனச் சேவைகளுக்குக் கூடுதல் டாக்சிகளையும் இதர வாகனங்களையும் ஊக்குவிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
சிங்கப்பூர்ப் பயணிகளுக்கு எல்லை கடந்த வாடகை கார் சேவை தொடர்பில் கூடுதல் வசதி செய்துதரும் நோக்கில் அந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.
“நமது ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டிக்காப்பதும் நம் முன்னுரிமைகளில் அடங்கும். நம் சாலைகளைப் பயன்படுத்தும் வெளிநாட்டு வாகனங்களைக் கண்காணிக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவோம்,” என்று திருவாட்டி சுன் ஷுவெலிங் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சட்டவிரோதமாக வாடகை கார் சேவை வழங்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓட்டுநர்களுக்கு $3,000 வரையிலான அபராதமோ ஆறு மாதச் சிறைத்தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரில் டாக்சி அல்லது வாடகை கார் சேவை வழங்க விரும்புவோர் பொது வாகனச் சேவை உரிமம் பெற்றிருப்பது கட்டாயம். மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட டாக்சிகளும் ஆசியான் பொது வாகனச் சேவை அனுமதி பெற்றிருக்க வேண்டும். இவ்விரு உரிமங்களையும் நிலப் போக்குவரத்து ஆணையம் வழங்குகிறது.