சட்டவிரோதமாக விநியோகச் சேவைகளில் ஈடுபடும் வெளிநாட்டவரைப் பற்றி பொதுமக்கள் விரைவில் எளிதில் புகாரளிக்கலாம்.
அதற்கு வகைசெய்ய மனிதவள அமைச்சு, அதன் இணையத்தளத்தில் ஓர் அம்சத்தைச் சேர்க்கவிருப்பதாக சுகாதார, மனிதவள அமைச்சுகளுக்கான மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் புதன்கிழமை (ஆகஸ்ட் 20) ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார். சட்டவிரோதமாக விநியோகச் சேவைகளை வழங்கிய வெளிநாட்டவர் மூவர் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
புதிய அம்சம் செயல்பாட்டுக்கு வரும் வரை பொதுமக்கள் இதன் தொடர்பில் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் குறித்து இந்த இணைய முகவரி மூலம் புகாரளிக்கலாம்: https://www.mom.gov.sg/eservices/services/report-an-infringement?ref=inline-article
முறியடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆதரவளித்ததற்கு உள்ளூர் இணையவழி விநியோகச் சேவை ஓட்டுநர்களுக்கு டாக்டர் கோ நன்றி தெரிவித்துக்கொண்டார். தேசிய விநியோக ஆர்வலர்கள் சங்கம் அளித்த தகவல்களைக் கொண்டு தவறு நடக்கக்கூடிய பகுதிகளைக் குறிவைத்து முறியடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பணியில் இருந்தபடியே 370க்கும் அதிகமான விநியோகச் சேவை ஓட்டுநர்கள், முறியடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மனிதவள அமைச்சு அதிகாரிகளுக்குக் கைகொடுத்தனர் என்று டாக்டர் கோ சுட்டினார்.
“உணவு விநியோக ஒட்டுநர்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு நிமிடமும் பொன்னானது. வேலைக்கு நடுவே உதவிக்கரம் நீட்டியது சிறிய தியாகம் கிடையாது. அவர்களின் ஒத்துழைப்புக்கும் பொறுப்புணர்வுக்கும் நாங்கள் மிகவும் நன்றியுடன் இருக்கிறோம்,” என்றார் அவர்.
“சட்டவிரோத விநியோகச் சேவை நமது உள்ளூர் இணையவழி ஊழியர்களைப் பாதிக்கும். அதனால் அமலாக்க நடவடிக்கைகள் நிலைமையைச் சீராக்க உதவுகின்றன,” என்றும் டாக்டர் கோ விவரித்தார்.
இணையவழி ஊழியர்கள் முத்தரப்புக் குழு, அத்தகைய ஊழியர்கள் முன்வைக்கும் கவலை தரும் அம்சங்களைத் தொடர்ந்து ஆராயும் என்றும் டாக்டர் கோ தெரிவித்தார்.

