தியோங் பாருவில் சட்டவிரோத வாணவேடிக்கை; 20 வயது ஆடவர் கைது

தியோங் பாருவில் சட்டவிரோத வாணவேடிக்கை; 20 வயது ஆடவர் கைது

படம்: SCREENGRABS FROM SULTANI.165/TIKTOK

28 Oct 2025 - 7:17 pm

1 mins read

தியோங் பாரு பகுதியின் வீடமைப்பு வளர்ச்சிக் கழக கார்நிறுத்துமிடத்தில் சட்டவிரோத வாணவேடிக்கையை நிகழ்த்திய சந்தேகத்தின் பேரில் 20 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புளோக் 131ஏ, கிம் தியான் ரோட்டில் நடந்த சம்பவம் பற்றிய தகவல் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) இரவு 10.30 மணிக்குக் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

யாருக்கும் காயம் ஏற்படவில்லை, விசாரணை தொடர்கிறது என்று காவல்துறை கூறியுள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்த சுல்தானி என்ற 18 வயதுப் பெண், இதுகுறித்த விவரங்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பகிர்ந்துகொண்டார். ஓரு ஆடவர் கார்நிறுத்தும் கட்டடத்தின் மேல் மாடியில் வாணவேடிக்கையை நிகழ்த்தத் தொடங்கிய பிறகு, சற்று தூரத்திலிருந்து காணொளி எடுப்பதை அவர் பார்த்தார்.

வீவக வீடுகளுக்கு அருகில் 26 நொடி வாணவேடிக்கை நிகழ்வது டிக்டாக் சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் நடந்துள்ள இரண்டாம் சட்டவிரோத வாணவேடிக்கை சம்பவம் இதுவாகும்.

நியூட்டன் அருகே, அக்டோபர் 18ஆம் தேதி சட்டவிரோதமாக வாணவேடிக்கை நிகழ்த்திய குற்றத்துக்கு 39 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தடை செய்யப்பட்ட இத்தகைய குற்றத்துக்கு ஐந்து ஆண்டுச் சிறையும் $100,000 அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்