இவ்வாண்டு மார்ச் மாத நடுப்பகுதியில் சிங்டெல் பயனர்கள் சந்தித்த தொடர்ச்சியான சேவைத் தடைகள் குறித்து தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் விசாரித்து வருகிறது என்றும் அதன் முடிவில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார்.
சேவைத் தடை குறித்து எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்குத் திருவாட்டி டியோ நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) பதிலளித்தார்.
அப்போது, “சேவைத் தடைகள் குறித்த விசாரணை நிறைவடைந்த பிறகு அதன் முடிவுகள் வெளியிடப்படும். சேவையில் குறைகள் உள்ளதாக அறியப்பட்டால் கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுக்க ஆணையம் தயங்காது,” என்று அமைச்சர் உறுதிகூறினார்.
மார்ச் 16ல் நிகழ்ந்த சேவைத் தடையால் ஏறத்தாழ 600,000 பயனர்கள் பாதிக்கப்பட்டதாக அமைச்சர் டியோ குறிப்பிட்டார்.
அந்த இடையூறு கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் நீடித்ததாகவும் அவர் சொன்னார்.
மார்ச் மாதம் 16லிருந்து 18ஆம் தேதிக்கு இடைப்பட்ட மூன்று நாள்களில் சிங்டெல் தொலைத்தொடர்புக் கட்டமைப்பில் தொடர்ந்து சேவைத் தடை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் மார்ச் மாதம் 16ஆம் தேதி ஏற்பட்ட சிங்டெல் சேவைத் தடை எட்டு மணிநேரம் நீடித்தது. அதனால், கட்டண, உணவு விநியோகச் சேவைகள் போன்ற அத்தியாவசியச் சேவைகளும் பாதிக்கப்பட்டன.
பிறகு இரண்டாம் நாளான 17ஆம் தேதியும் சேவைத் தடை ஏற்பட்டது. இரு நாள்களில் மொத்தம் 30 மணிநேரத்துக்கு மேல் சேவைத் தடை ஏற்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, அந்த இடையூறுகள் எந்தவோர் இணையப் பாதுகாப்புத் தாக்குதல்களுடனும் தொடர்புடையவை அல்ல என்றும் அதுதொடர்பான எந்த அறிகுறியும் இல்லை என்றும் நாடாளுமன்றத்தில் அமைச்சர் டியோ தெளிவுபடுத்தினார்.

