அரசாங்க அதிகாரிபோல் ஆள்மாறாட்ட மோசடி: மேலும் இரு மலேசியர்கள் கைது

அரசாங்க அதிகாரிபோல் ஆள்மாறாட்ட மோசடி: மேலும் இரு மலேசியர்கள் கைது

2 mins read
மோசடிக் கும்பல்களுக்கு உதவ மலேசியர்கள் சிங்கப்பூருக்குள் நுழைகின்றனர்
ea93d011-b480-446d-85f8-f768dfcf0925
ராப்பிள்ஸ் பிளேஸ் நடைபாதையில் இணைய மோசடிக்கு எதிரான பதாகை. - படம்: ஏஎஃப்பி

அரசாங்க அதிகாரிபோல் ஆள்மாறாட்டம் செய்யும் மோசடி சிங்கப்பூரில் அண்மையக் காலமாக தொடர்கிறது.

அந்தக் குற்றத்துக்காக மேலும் இரண்டு மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சனிக்கிழமை (மார்ச் 21) அறிக்கை வெளியிட்டுள்ளது.

இங்கு அரசாங்க அதிகாரிபோல் ஆள்மாறாட்ட மோசடி குற்றங்களுக்காக இவர்களுடன் இதுவரை எட்டு மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அந்த இரு ஆடவர்களில் 30 வயதானவர்மீது ஞாயிற்றுக்கிழமையும் 20 வயது ஆடவர்மீது திங்கட்கிழமையும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

மோசடிக் கும்பல்களுக்கு உதவ மலேசியர்கள் சிங்கப்பூருக்குள் நுழையும் போக்கு தொடர்வதை இது காட்டுகிறது.

இங்கு மோசடிக்கு ஆளானோரிடம் இருந்து ரொக்கத்தையும் விலை மதிப்பான பொருள்களையும் அவர்கள் பெற்றுக்கொண்டு அடையாளம் தெரியாத அனைத்துலக மோசடிக் கும்பலைச் சேர்ந்தோரிடம் பிறகு ஒப்படைக்கின்றனர் என்று காவல்துறை தெரிவித்தது.

சிங்கப்பூர் நாணய ஆணையம், எம்1 தொலைத்தொடர்பு நிறுவனம் என இரு அமைப்புகளின் அதிகாரிகள்போல் தொலைபேசியில் பேசி, 62 வயது மாது ஒருவரிடம் மோசடி செய்யப்பட்டது.

கள்ளப் பணப் பரிவர்த்தனை, இணையத்தில் பொருள்கள் வாங்கியது போன்ற பல குற்றங்கள் நடந்துள்ளதாக அம்மாதிடம் ஆள்மாறாட்டக்காரர்கள் தொலைபேசியில் மிரட்டியுள்ளனர்.

உண்மை என நம்பி, அந்த மாது அவரிடம் இருந்த 8.6 கிலோகிராம் எடையுள்ள தங்கக்கட்டி ஒன்றை இரு ஆடவர்களிடம் ஷென்டன் வே வட்டாரத்தில் ஒப்படைத்துள்ளார். பிறகு சந்தேகம் எழவே அவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

அதனை எடுத்துக்கொண்டு சிங்கப்பூரிலிருந்து தப்பிச்செல்ல முயன்ற 30 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். 20 வயது ஆடவர் உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் கைதானார்.

குறிப்புச் சொற்கள்