ஆள்மாறாட்டம்: குறைந்தது $8.5 மில்லியன் இழப்பு

ஆள்மாறாட்டம்: குறைந்தது $8.5 மில்லியன் இழப்பு

படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

23 Apr 2026 - 8:57 pm

2 mins read

பிப்ரவரி மாதம் முதல் சட்ட அமைச்சின் அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்த மோசடிக்காரர்களிடம், பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது $8.5 மில்லியனை இழந்துள்ளனர். இந்தக் காலகட்டத்தில் குறைந்தது 98 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்தச் சம்பவங்களில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அல்லது வங்கிகளின் ஊழியர்கள் எனத் தங்களைக் கூறிக்கொள்ளும் முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து அழைப்புகள், குறுஞ்செய்திகள் அல்லது மின்னஞ்சல்களைப் பாதிக்கப்பட்டவர்கள் பெற்றனர் என்று சட்ட அமைச்சும் சிங்கப்பூர் காவல்துறையும் வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 23) தெரிவித்தன.

பின்னர், அவர்களுடைய பெயரில் அங்கீகரிக்கப்படாத வங்கி அட்டைகள் அல்லது தொலைத்தொடர்புத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும் உதவிக்காக, சட்ட அமைச்சிலிருந்து பேசுவதாகக் கூறப்படும் வேறு சில மர்ம நபர்களிடம் அவர்கள் திருப்பிவிடப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பதாகக் கூறும் இந்த மோசடிக்காரர்கள், விசாரணைக்காகப் பணத்தை பாதுகாப்புக் கணக்குகளுக்கு மாற்றிவிடுமாறும் அல்லது மர்ம நபர்களிடம் மதிப்புமிக்க பொருள்களை ஒப்படைக்குமாறும் அவர்களிடம் கூறினர்.

சில சம்பவங்களில், சட்ட அமைச்சு போன்ற அரசாங்க அமைப்புகள், மூத்த அரசாங்க அதிகாரிகள் அல்லது அரசியல் பதவிகளில் இருப்பவர்களிடமிருந்து வழங்கப்பட்டதாகக் கூறப்படும் போலி ஆவணங்களை மோசடிக்காரர்கள் காட்டியதாகச் சட்ட அமைச்சு கூறியது.

“மோசடிக்காரர்களைத் தொடர்புகொள்ள முடியாதபோதும், அல்லது சட்ட அமைச்சு அல்லது காவல்துறையிடம் சரிபார்க்க முற்பட்டபோதும்தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதைப் பாதிக்கப்பட்டவர்கள் உணர்ந்தனர்,” என்று சட்ட அமைச்சு தெரிவித்தது

தொலைபேசி மூலம் பணத்தையோ அல்லது மதிப்புமிக்க பொருள்களையோ இடமாற்றும்படியோ அல்லது தங்களிடம் ஒப்படைக்குமாறோ அரசாங்க அதிகாரிகள் ஒருபோதும் கேட்கமாட்டார்கள் என்று பொதுமக்களுக்கு நினைவூட்டப்படுகிறது.

சட்ட அமைச்சு அதிகாரிகளுடனான தகவல் பரிமாற்றங்களின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க விரும்புவோர், go.gov.sg/contactminlaw என்ற இணையப்பக்கத்தில் உள்ள விசாரணைப் படிவத்தின் மூலமாகவோ அல்லது 1800-2255-529 என்ற சட்ட அமைச்சின் தொடர்பு எண் மூலமாகவோ தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்
ஆள்மாறாட்டம்மோசடிஅமைச்சு