சிங்கப்பூரில் சொந்த மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆடவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு ஆடவர், தமது 15 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்தப் பெண், தந்தை குளியலறையில் இருந்த சமயத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று நடந்தவற்றை விவரித்தார்.
மகளைத் தேடிய ஆடவர் காவல் நிலையத்தில் அவரைக் கண்டதை அடுத்து தாமாக முன்வந்து சரணடைந்தார்.
பாலியல் வன்கொடுமைக்கு அப்பால் 2021, 2023ஆம் ஆண்டுகளில் மகளின் மார்பகப் பகுதியையும் அந்த ஆடவர் புகைப்படம் எடுத்தது விசாரணையில் தெரியவந்தது.
ஆடவர் கைதானதைத் தொடர்ந்து முன்னதாக ஒரு நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாகப் பணிபுரிந்த சமயத்தில் அவர் தமது முதலாளியிடமிருந்து $23,000 பணத்தையும் கையாடியது வெளிச்சத்துக்கு வந்தது.
செப்டம்பர் 7ஆம் தேதி 51 வயது ஆடவர் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
அவரது வயது 50க்கும் அதிகம் என்பதால் பிரம்படி விதிக்கப்படவில்லை. மாறாக, தீர்ப்பின்போது சிறைத் தண்டனையில் நான்கு மாதங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை ரகசியமாக வைத்திருக்கவேண்டும் என்பதால் ஆடவரின் பெயர் போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மகள் வளரும் பருவத்தில் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது.
