கடந்த 2024ஆம் ஆண்டு பிற்பாதியில் உயிரிழப்பு நேர்ந்த 14 கட்டுமானத் தளங்களில் ஒன்பதில் போதிய பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அத்தளங்களில் பணி நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் பாதுகாப்பு அமைப்புகள் மறுஆய்வு போன்ற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னரே அங்கு மீண்டும் பணிகளைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது என்றும் மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 7) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்துகள் அதிகரித்துள்ளது கவலை தருவதாகக் குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர், கட்டுமானத் துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் என்றும் சீனப் புத்தாண்டுக் காலம் நெருங்குவதால் கூடுதல் கண்காணிப்பு தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஆயினும், வேலையிட மரணங்களையும் காயங்களையும் குறைக்கும் நோக்கில் மனிதவள அமைச்சு 2024ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த கட்டுமானத் துறைக்குப் போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பெரிய கட்டுமானத் தளங்களில் காணொளிக் கண்காணிப்புக் கருவிகளை நிறுவுதல், பொதுக் கட்டுமான ஒப்பந்தப்புள்ளி மதிப்பீட்டின்போது பாதுகாப்பு அம்சங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
“பாதுகாப்பையும் பொறுப்புடைமையையும் மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அமைச்சு கண்காணிக்கும்,” என்றார் திரு ஸாக்கி.
வரும் 2028ஆம் ஆண்டிற்குள், வேலையிட உயிரிழப்பு விகிதத்தை 100,000 ஊழியர்களுக்கு ஒன்றுக்கும் கீழாகக் குறைக்க அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இப்போது அவ்விகிதம் சராசரியாக 100,000 பேருக்கு 1.1 பேர் என்ற அளவிற்குக் குறைந்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கட்டுமானத் துறையில் சென்ற ஆண்டு முற்பாதியில் நேர்ந்த வேலையிட விபத்துகளில் ஐவர் உயிரிழந்த நிலையில், பிற்பாதியில் அது மும்மடங்காகி 15ஆக உயர்ந்தது என்று கடந்த டிசம்பர் மாதம் மனிதவள அமைச்சு தெரிவித்திருந்தது.

