தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
வணிகச் சூழல் மிகச் சிறப்பாக இருப்பதாக சிங்கப்பூரிலுள்ள 70% சீன நிறுவனங்கள் கருத்து

சிங்கப்பூரை நாடும் சீன நிறுவனங்கள் அதிகரிப்பு

2 mins read
51814b3b-9442-495e-910f-3b343f10851a
ராஃபிள்ஸ் பிளேஸ். சிங்கப்பூரின் வலுவான வணிகச் சூழல் தொழில்களுக்குச் சாதகமாக இருப்பதாக சீன நிறுவனங்கள் கருத்து. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வலுவான வணிகச் சூழல், தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாக நாட்டின் உத்திபூர்வ பங்கு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு சிங்கப்பூருக்கு வரும் சீன நிறுவனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக சிங்கப்பூர் சீன நிறுவனங்கள் சங்கம் திங்கட்கிழமை (டிசம்பர் 31) வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆய்வில் பங்கேற்ற மொத்தம் 67 விழுக்காடு நிறுவனங்கள், சிங்கப்பூரில் வணிகச் சூழல் மிகச் சிறப்பாக உள்ளதாக மதிப்பிட்டுள்ளன. 33 விழுக்காடு நிறுவனங்கள் ‘சிறப்பு’ என்று கருதுகின்றன என்று ஐந்தாவது சீனா-சிங்கப்பூர் பொருளியல், வர்த்தக ஒத்துழைப்புக் கருத்தரங்கின்போது வெளியிடப்பட்ட அறிக்கை குறிப்பிட்டது.

சிங்கப்பூரின் ஆற்றல்மிக்க அரசாங்க சேவைகள், வரி முறை, அனைத்துலக வணிகத்தை எளிதாக்குதல் ஆகியவை முக்கிய ஈர்ப்புகளில் அடங்கும். இவை நம்பிக்கையைத் தூண்டியுள்ளன. ஆய்வில் பங்கேற்றவர்களில் 60 விழுக்காட்டினர் உள்நாட்டிலும் வட்டார அளவிலும் தங்கள் முதலீடுகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, சிங்கப்பூர் முதலீடுகளில் தொடர்ச்சியான வளர்ச்சியை 74 விழுக்காட்டினர் எதிர்பார்க்கின்றனர்.

கேந்திர முக்கியத்துவம் சிங்கப்பூருக்கு தனிச்சிறப்பைக் கொடுக்கிறது. இது தென்கிழக்கு ஆசிய சந்தைகளை எட்டுவதற்கு உதவுவதை 91% நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. சீன நிறுவனங்கள் உள்ளூர் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்களிக்கின்றன, 54 விழுக்காடு நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களில் 60 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் சிங்கப்பூரர்கள் என்று தெரிவித்தன.

தொழில்நுட்பம், சேவைத் துறையில் புத்தாக்கங்களுக்கு 58% நிறுவனங்கள் பங்களித்த வேளையில், 40% நிறுவனங்கள் பசுமை மேம்பாட்டுக்காகக் குறிப்பிடப்பட்டன.

தீவிரமடைந்து வரும் சந்தைப் போட்டி, திறனாளர் பற்றாக்குறை ஆகியவை முறையே 86%, 72% விழுக்காடு நிறுவனங்களால் சவால்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசாங்கமும் சங்கமும் கூடுதல் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பல நிறுவனங்கள் கோரின.

இந்த அறிக்கை 2024ன் நடுப்பகுதியில் சிங்கப்பூரில் பல்வேறு துறைகளில் செயல்படும் 100க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்களை உள்ளடக்கிய ஆய்வை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்