சிங்கப்பூரில் கட்டடங்களை அனுமதி இன்றி மாற்றி அமைக்கும் சம்பவங்கள் சிங்கப்பூரில் அதிகரித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது..
அதனைத் தொடர்ந்து, சொத்து உரிமையாளர்கள் தங்களது வீடுகளிலும் கட்டடங்களிலும் அனுமதி இன்றி மாற்றங்கள் செய்யக்கூடிய கட்டுமானப் பணிகள் என்னென்ன என்பதை ஆணையம் ஆராயத் தொடங்கி உள்ளது.
அதேநேரம், அனுமதி இன்றி கட்டடங்களின் தோற்றத்தை மாற்றி அமைக்க வேண்டிய நோக்கம் என்ன என்பதை அது விசாரித்து வருகிறது.
2020ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடையில் கட்டடங்களின் கட்டமைப்பை அனுமதியின்றி மாற்றி அமைக்கும் சம்பவங்கள் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 120 பதிவானதாக செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளுக்கு ஆணையம் அனுப்பிய தகவலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த எண்ணிக்கை 2016க்கும் 2018க்கும் இடையில் பதிவான 170 சம்பவங்களைக் காட்டிலும் இருமடங்கு அதிகம். அப்போது ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 57 சம்பவங்களே நிகழ்ந்தன. 2019ஆம் ஆண்டின் நிலவரம் பற்றி ஆணையம் எதனையும் குறிப்பிடவில்லை.
ஹெய்க் அவென்யூவில் உள்ள இரு தனியார் குடியிருப்புக் கட்டடங்களின் உச்சியில் அனுமதி இன்றி கட்டமைப்பு மாற்றம் செய்யப்பட்டதா என்பதை கட்டட, கட்டுமான ஆணையமும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் விசாரித்து வந்ததாக கடந்த மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தது.