விண்வெளித் துறையின் வளர்ச்சிக்குச் சிங்கப்பூரின் முதலீட்டை நாடும் இந்தியா

விண்வெளித் துறையின் வளர்ச்சிக்குச் சிங்கப்பூரின் முதலீட்டை நாடும் இந்தியா

2 mins read
7dc39a3a-8f87-4c6b-bbc0-91c12e4bbaec
சிங்கப்பூர் விண்வெளி உச்சநிலை மாநாட்டில் பேசிய இந்தியத் தேசிய விண்வெளி மேம்பாடு, அங்கீகார மையத்தின் தலைவர் டாக்டர் பவன் கோயெங்கா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் செயற்கைக் கோள்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை ஏவ இந்தியா உதவியுள்ளது. தற்போது இந்தியா அதன் விண்வெளித் துறையை விரிவாக்கம் செய்வதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

அதனால் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் முதலீட்டை ஈர்க்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.

“20 மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் நேரடியாக வெளிநாட்டு முதலீடுகள் செய்வதில் சில சிக்கல்கள் இருந்தன. ஆனால் இப்போது சில துறைகளில் எந்தச் சிக்கலும் இன்றி 100 விழுக்காடுவரை முதலீடு செய்ய விதிமுறைகள் உள்ளன,” என்று இந்தியத் தேசிய விண்வெளி மேம்பாடு, அங்கீகார மையத்தின் தலைவர் டாக்டர் பவன் கோயெங்கா தெரிவித்தார்.

சிங்கப்பூர் விமானக் கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற முதலாவது சிங்கப்பூர் விண்வெளி உச்சநிலை மாநாட்டில் அவர் கலந்து கொண்டபோது இக்கருத்தை அவர் கூறினார்.

“சென்னையில் சிறிய அளவில் செயற்கைக்கோள் பாய்ச்சும் இடம் கட்டிமுடிக்கும் நிலையில் உள்ளது. அது சிங்கப்பூருக்கு மிக அருகில் இருப்பது கூடுதல் பலம். அதனால் சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் இதைக் கவனிக்கலாம்,” என்றார் டாக்டர் கோயெங்கா.

விண்வெளித் துறையில் இந்தியாவின் மூன்றாவது பெரிய வாடிக்கையாளராகச் சிங்கப்பூர் உள்ளது. 20க்கும் மேற்பட்ட சிங்கப்பூரின் செயற்கைக் கோள்களை இந்தியா வெற்றிகரமாகப் பாய்ச்சியுள்ளது.

உள்நாட்டுக் கட்டமைப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு உள்ளிட்டவற்றுக்கு விண்வெளியில் இருந்து கிடைக்கும் தரவுகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அது, நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் அரணாக இருக்கும் என்று கவனிப்பாளர்கள் நம்புகின்றனர்.

இதற்கிடையே இந்தியா, விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களை ஈர்க்கவும் திட்டமிட்டுள்ளது.

2033ஆம் ஆண்டுக்குள் இந்தியா அதன் விண்வெளித் துறைக்கான பொருளியலை 56 பில்லியன் வெள்ளியாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

தற்போது அதன் பொருளியல் மதிப்பு 8.4 பில்லியன் வெள்ளியாக உள்ளது.

அதேபோல், இந்தியா 2035ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் ஒரு நிலையத்தை அமைக்கவும் 2040ஆம் ஆண்டுக்குள் இந்தியக் குடிமகனின் பாதம் நிலாவில் பட வேண்டும் என்றும் எண்ணம் கொண்டுள்ளது.

சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் வளர்ச்சிக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதில் இந்தியா தெளிவாக உள்ளது.

பிரைஸ்டெக் நிறுவனத்தின் தரவுகளின்படி உலக அளவில் 86 விழுக்காடு வர்த்தக ரீதியான செயற்கைக் கோள்களை அமெரிக்க நிறுவனங்கள் பாய்ச்சுகின்றன. 9 விழுக்காடு சீனா மேற்கொள்கிறது.

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளி வளர்ச்சி வேகமாக இருக்கும் என்றும் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்