பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இந்தியாவும் சிங்கப்பூரும் வலியுறுத்தியுள்ளன.
பயங்கரவாதம் மற்றும் நாடுகடந்த குற்றங்களை எதிர்ப்பதற்கான இந்தியா - சிங்கப்பூர் கூட்டுப் பணிக்குழுவின் ஐந்தாவது கூட்டம் வியாழக்கிழமை (மே 7) புதுடெல்லியில் நடைபெற்றது.
பயங்கரவாத ஆட்சேர்ப்பு, பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய நடமாட்டம், தீவிரமயமாக்கல், பயங்கரவாத நோக்கங்களுக்காகத் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்கள் குறித்து பணிக்குழு பேசியது.
இணையவழிக் குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல், நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கும் பயங்கரவாதத்திற்கும் இடையிலான தொடர்பு ஆகியவை குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன.
இந்திய வெளியுறவு அமைச்சின் பயங்கரவாதத் தடுப்பு பிரிவுக்கான இணைச் செயலாளர் டாக்டர் வினோத் பஹாடே, சிங்கப்பூர் உள்துறை அமைச்சின் கொள்கை பிரிவுக்கான துணைச் செயலாளர் கியாம் ஷி சுன் ஆகிய இருவரும் அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர்.
பஹல்கம், டெல்லி செங்கோட்டை ஆகிய இடங்களில் கடந்த ஆண்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு மிகக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்த பணிக்குழு, பயங்கரவாதத்திற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு நீடித்த, விரிவான முறையில் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்பதைப் பணிக்குழு ஏற்றுக்கொண்டதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
மேலும், அந்தச் சவால்களை எதிர்கொள்வதில் இந்தியாவும் சிங்கப்பூரும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்புக்கொண்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக, தகவல்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்தல், சட்ட அமலாக்கம், திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் மேலதிக ஒத்துழைப்பும் கூட்டுறவும் எதிர்பார்க்கப்படும்.
புதுடெல்லிக்கு வருகையளித்த சிங்கப்பூர் குழுவினர் இந்தியாவின் மோசடித் தடுப்பு மையத்தையும் பார்வையிட்டனர்.
அடுத்த இந்தியா - சிங்கப்பூர் கூட்டுப்பணிக்குழு, இருதரப்புக்கும் உகந்த தேதியில் சிங்கப்பூரில் நடைபெறும்.

