அமைச்சர் வரவால் மேலும் வலுவடைந்த சிங்கப்பூர்- இந்தியா நல்லுறவு

‘கிழக்கு நோக்கிய கொள்கை’ எனும் இலக்கின் இதயத்துடிப்பு சிங்கப்பூர்: அமைச்சர் ஜெய்சங்கர்

2 mins read
cb27b01b-0346-49a9-837e-b68bc1ba7eb0
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என்றார் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் (இடது). - படம்: எஸ். ஜெய்சங்கர் ஃபேஸ்புக்

சிங்கப்பூர்-இந்தியா இருநாட்டு அரசதந்திர உறவுகள் அதன் 60வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில் இவ்விரு நாடுகளின் நல்லுறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் சிங்கப்பூர் பயணம்.

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) அன்று அதிபர் தர்மன் சண்முகரத்னம், துணைப் பிரதமரும் வர்த்தக தொழில் அமைச்சருமான திரு கான் கிம் யோங், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைச் சந்தித்தார்.

இது தொடர்பாகத் தமது சமூக ஊடகப் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள திரு ஜெய்சங்கர், இந்தியாவின் ‘கிழக்கு நோக்கிய  கொள்கை’ எனும் இலக்கின் இதயத்துடிப்பாகச் சிங்கப்பூர் திகழ்வதாகச் சுட்டினார்.

மேலும், இருதரப்பு உறவுகள் அடைந்து வரும் சீரான முன்னேற்றம் குறித்து ஆலோசித்த அதே வேளையில், விரைவில் நடைபெறவிருக்கும் இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்  நிலையிலான மூன்றாம் வட்டமேசை மாநாட்டை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் திரு ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது இருநாடுகளின் உறவுகள் கண்டுள்ள செழிப்பான முன்னேற்றம், அவற்றுடன் எதிர்காலத்தில் வளமான முதலீடுகள், கட்டுமானம், தொழிற்பூங்காக்கள், திறன் மேம்பாடு எனப் பல்வேறு துறைகளிலும் சிங்கப்பூர் இந்தியாவிற்கு இடையேயான ஒத்துழைப்புகள், சாத்தியக்கூறுகளை  இன்னும் வலுப்படுத்துவது குறித்த அம்சங்கள் கலந்துரையாடப்பட்டன.

இதற்கிடையே, இந்திய வெளியுறவு அமைச்சர் உடனான சந்திப்புகுறித்து சமூக வலைப்பக்கத்தில் கருத்துரைத்த வெளியுறவு அமைச்சர் விவியன்,  “பல்வேறு வலிமைபெற்ற நாடுகளைக் கொண்டிருக்கும் இடமாக உலகம் மாறிவரும் சூழலில், மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றச் சிறந்த வாய்ப்பு தரும் இடமாகவும், முக்கிய பங்கு வகிக்கும் ஓர் அங்கமாகவும் இந்தியா மாறும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்