வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பல திட்டங்களையும் வாய்ப்புகளையும் முழுமையாகப் பயன்படுத்தி நம்மை ஒருங்கிணைந்த சமூகமாக வலுப்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவள அமைச்சுகளின் துணை அமைச்சரும் தென்கிழக்கு வட்டார மேயருமான தினேஷ் வாசு தாஸ்.
இந்தியச் சமூகம் அதன் அளவைவிடப் பெரிதாக, தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்திச் சாதனைகளைச் செய்யவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நாம் உயர்ந்த நிலைக்குச் சென்று, தொடர்ந்து நமது திறனை நிரூபிக்க வேண்டும் என்றார் அவர்.
வரவுசெலவுத் திட்ட அறிவிப்புகள் அனைத்துச் சமூகங்களுக்கும் பொதுவானவை என்றாலும், இந்தியச் சமூகம் அவற்றை அடிப்படையாகக்கொண்டு ஒட்டுமொத்தமாகத் தங்களை வலுப்படுத்திக்கொள்ளலாம் என்று தமிழ் முரசுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் திரு தினேஷ் குறிப்பிட்டார்.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு, வணிக விரிவாக்க ஆதரவு, சமூக உதவித் திட்டங்கள் ஆகியவை வளர்ச்சிக்கான முக்கியத் தளங்களாக உள்ளன என்றார் அவர்.
கலை, இசை, வணிகம் உள்ளிட்ட எந்தத் துறையாக இருந்தாலும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி திறன்களை மேம்படுத்திக்கொள்ள இந்தியர்களைத் திரு தினேஷ் ஊக்குவித்தார்.
செயற்கை நுண்ணறிவு திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகளை அளிக்கிறது. இன்று நாம் சிந்திக்காத புதிய துறைகளில் வளர்ச்சியடைய அது உதவும்.
முன்னதாக, பிரதமர் லாரன்ஸ் வோங் இந்தியச் சமூகம் ‘தங்களின் எண்ணிக்கையைவிட அதிக சாதனைகளைப் படைக்கும் சமூகமாக’ இருப்பதாகக் குறிப்பிட்டதை நினைவுகூர்ந்த திரு தினேஷ், கடந்த பல ஆண்டுகளாக சிங்கப்பூர் அதனை நிரூபித்துள்ளது. அது தொடர வேண்டும் என்று அவர் கூறினார்.
சமூகத்தில் ஆதரவு தேவைப்படுவோரைக் கவனிப்பது முக்கியம். அறிவிக்கப்பட்டுள்ள உதவித் திட்டங்களை அவர்களுக்கு எடுத்துரைத்து, பயன்பெறச் செய்ய வேண்டும். சிலருக்குக் கூடுதல் ஆதரவு தேவைப்படலாம். அவர்களுக்கு என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை எடுத்துக்கூறுவது சமூகத்தின் பொறுப்பு என்றார் திரு தினேஷ்.
தொடர்புடைய செய்திகள்
உடனடி உதவிகளைத் தாண்டி, வாழ்க்கை முன்னேற்றத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கும் கூடுதல் ஆதரவு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. தகுதியானவர்கள் உதவிகளைப் பெறுவதற்கு விழிப்புணர்வு தேவை என அவர் சுட்டினார்.
இது எந்தச் சமூகத்திலும் நடக்கும் ஒன்று. ஆனால், இந்தியச் சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களை முன்னேற்ற நாம் மேலும் செயல்படலாம்.
மாணவர்களுக்குப் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இளம் இந்திய மாணவர்கள் அவற்றைப் பயன்படுத்தி கல்வியிலும் திறன் வளர்ச்சியிலும் முன்னேற வேண்டும்.
மூத்த பணியாளர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து ஆண்டின் பிற்பகுதியில் மேலும் அறிவிப்புகள் வெளியாகும். 60 அல்லது 65 வயதுக்குமேல் வேலை செய்ய விரும்புபவர்கள் அதனைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று திரு தினேஷ் கூறினார்.
இந்தியத் தொழில்முனைவோர், வணிகங்களுக்கான ஆதரவு
இந்தியத் தொழில்முனைவோர், வணிகங்களுக்கு இந்த வரவுசெலவுத் திட்டம் மிகவும் சாதகமானது என்ற அவர், நிறுவன வரிச் சலுகைகள், வெளிநாட்டு விரிவாக்கத்திற்கு வழங்கப்படும் நிதி ஆதரவுகளைச் சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூரில் உள்ள இந்திய வணிகங்களும் தொடக்க நிறுவனங்களும் வெளிநாடுகளுக்கு விரிவடைய இது ஒரு சிறந்த வாய்ப்பு. அது இந்தியாவாக இருக்கலாம், வேறு நாடாகவும் இருக்கலாம். வாய்ப்புகள் உண்டு என்றார் அவர்.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு, அரசாங்கத்தின் ஆதரவைப் பயன்படுத்தி, உலகளாவிய சந்தைகளை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்று துணை அமைச்சர் தினேஷ் வலியுறுத்தினார்.

