தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிளவுகளைக் கடந்து இந்திய சமூகம் ஒருங்கிணைய வேண்டும்: தினேஷ் வாசு

2 mins read
8ac47196-7367-4ee6-9e95-87877ceab717
தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராவதும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிவாசிகளின் நலனுக்காகக் கடுமையாக உழைப்பதுமே தம்முடைய நோக்கம் என்கிறார் அக்குழுத்தொகுதி மக்கள் செயல் கட்சி (மசெக) வேட்பாளர்களில் ஒருவரான திரு தினேஷ் வாசு தாஸ்.  - படம்: தமிழ் முரசு

சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த இந்தியர்களையும் வெளிநாடுகளிலிருந்து, குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் இந்தியர்களையும் மேலும் ஒருங்கிணைக்கவேண்டும் என்று ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி வேட்பாளராக (மசெக) போட்டியிடும் திரு தினேஷ் வாசு தாஸ் தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் பிளவுகள் இருப்பின் அவை சிங்கப்பூருக்கும் இந்தியர்களுக்கும் நன்மையளிக்காது என்று அவர் கூறினார்.

“சிலரிடம் பணம் இருக்கலாம், சிலர் வசதி குறைந்தவர்களாக இருக்கலாம். முதியோருக்கும் இளையோருக்கும் இடையிலான வேறுபாடுகள் என்று எப்போதுமே சமுதாயத்தில் பதற்றங்கள் இருந்துகொண்டேதான் இருக்கும். பிளவுகளைப் பற்றி பேசாமல், மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பது என் நோக்கம்,” என்றார் திரு தினேஷ்.

அண்மையில் தமிழ் முரசு வழிநடத்திய கலந்துரையாடலில் பேசிய பிரதமர் லாரன்ஸ் வோங், இந்திய சமூகம் சிங்கப்பூருக்கு அளப்பரிய பங்களித்துள்ளது என்று தெரிவித்திருந்தார். அதை நினைவுகூர்ந்த திரு தினேஷ், சிங்கப்பூரின் மக்கள்தொகையில் இந்தியர்கள் ஏறத்தாழ எட்டு விழுக்காடாக இருந்தாலும் அவர்களின் பங்களிப்பு அதைவிடக் கூடுதலாக இருந்து வருவதாகத் திரு தினேஷ் குறிப்பிட்டார்.

Watch on YouTube

சிங்கப்பூர் ஆயுதப்படையில் 23 ஆண்டுகாலம் பணியாற்றிய திரு தினேஷ், பிரிகேடியர் ஜெனரலாக உயர்ந்தவர். பின்னர் சுகாதார அமைச்சில் இணைந்த இவர், கொவிட்-19 பெருந்தொற்றுக் காலகட்டத்தில் தொற்றுப் பரிசோதனை முதல் தடுப்பூசி இயக்கம் வரையிலான பல நிலைகளிலும் பெரும்பங்களித்தார். மேலும், எட்டு ஆண்டுகளாக தாதிமை இல்லம் ஒன்றின் அறங்காவலர் குழுவிலும் தணிக்கைக் குழுவிலும் தொண்டூழிய பணிகளில் இவர் ஈடுபட்டுள்ளார்.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி மசெக வேட்பாளர்களான திரு டேவிட் நியோ, திரு தினேஷ் இருவரும் முக்கியப் பொறுப்புகளை ஏற்கக்கூடிய திறனாளர்கள் என்று ஏப்ரல் 24ஆம் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டிருந்தார்.

அதுபற்றிக் கருத்துரைத்த திரு தினேஷ், தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராவதும் ஈஸ்ட் கோஸ்ட் தொகுதிவாசிகளின் நலனுக்காகக் கடுமையாக உழைப்பதுமே தமது தற்போதைய இலக்கு என்றார்.

மனைவி, இரண்டு மகன்கள், கடைக்குட்டி மகள் என்ற தமது குடும்பத்தினரின் ஆதரவும் அரசியல் நடவடிக்கைகளுக்குப் பக்கபலமாக இருந்துவருவதாக அவர் சொன்னார்.

“முதன்முதலில் அரசியல் பற்றி பேச்சு எடுத்தபோது என் மனைவி மிகுந்த ஆதரவளித்தார்,” என்ற திரு தினேஷ், தம் மகள் ‘அரசியலால் மனவுளைச்சல் ஏற்படுமா’ என்று தம்மிடம் கேட்டது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது என்றும் நினைவுகூர்ந்தார்.

“பள்ளிக்குப் போகும் மாணவர்கள் பலருக்கு மனவுளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதை எப்படிக் கட்டுப்படுத்தி குறைக்கலாம் என்பது என் கொள்கைகளில் ஒன்று," என்றார் அவர்.

அமெரிக்க வரிவிதிப்புகளால் அனைத்துலகப் பொருளியல் சூழலில் மாற்றம் ஏற்பட்டு, விலைவாசி அதிகரிக்கலாம் என்றும் தேர்தலில் வெற்றி பெற்றால் அந்தப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்றும் திரு தினேஷ் கூறினார்.

View post on Instagram
 
குறிப்புச் சொற்கள்