ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகருக்கு சென்றுகொண்டிருந்த சிங்கப்பூர்க் கப்பலில் 106 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இந்திய நாட்டவர்கள் ராஜு முத்துக்குமரன், 35, செல்வதுரை தினகரன், 34, கோவிந்தசாமி விமல்கந்தன், 45, தொடர்பான வழக்கு விசாரணை இந்தோனீசிய நீதிமன்றத்தில் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது .
இந்த வழக்கு தொடர்பிலான நீதிமன்ற விசாரணை கடந்த ஆண்டு டிசம்பரிலிருந்து நடைபெற்று வரும் வேளையில், இவ்வழக்கில் புதிய திருப்பமாக, கப்பல் மாலுமிக்குத் தெரியாமல் போதைப்பொருளைக் கப்பலில் வைப்பது சாத்தியமில்லை என்று பிரதிவாதிகள் தரப்பு முன்வைத்த வாதத்தைப் பதிவுசெய்த நீதிபதிகள், கப்பல் மாலுமியை முன்னிலையாகும்படி உத்தரவிட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இந்திய நாட்டவர் மூவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கும் வேளையில் உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் தமிழ் முரசிடம் புதன்கிழமை (மார்ச் 12) தெரிவித்தார் இந்திய வழக்கறிஞர் ஜான்பால், 39.
போதைப்பொருள் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவர் சார்பில் பிரதிநிதிக்கும் சவுத் ஏஷியா லெக்ஸ் (SAL) சட்டச் சேவை நிறுவனத்தின் திரு ஜான், இவ்வழக்கின் பின்னணி, நீதிமன்ற விசாரணை பற்றிய கூடுதல் விவரங்களையும் பகிர்ந்தார். இந்தோனீசியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள மூன்று தமிழர்களும், சிங்கப்பூரில் கப்பல் துறையில் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வந்துள்ளனர்.
சிங்கப்பூரில் ‘எஸ்-பாஸ்‘ வேலை அனுமதி அட்டையில் பணியாற்றி வந்த இம்மூவரில் முத்துக்குமரனும் விமல்கந்தனும் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். தினகரன் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
இவர்களின் உறவினர்கள், இந்தியாவில் உள்ள தங்கள் சட்ட நிறுவனத்தை அணுகியதாக திரு ஜான் சொன்னார்.
இந்தோனீசியாவின் நீதிமன்ற வழக்காடுமொழி பஹாசா இந்தோனீசியா என்பதால், இவ்வழக்கில் தமிழர்கள் சார்பில் வாதாடவும் நீதிமன்ற விசாரணையை எளிதாக்கவும் ‘பம்பாங் சுப்ரியாடி அண்ட் பார்ட்னர்ஸ்’ எனும் இந்தோனீசியச் சட்ட நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் திரு ஜான் தெரிவித்தார்.
ஜோகூர் பாருவிலிருந்து ஜுலை 12ஆம் தேதி புறப்பட்ட ‘லெஜண்ட் அக்வாரிஸ்’ என்ற சிங்கப்பூர் கப்பல் கரிமுன் மாவட்டத்துக்கு அருகிலுள்ள பொங்கார் கடற்பகுதியில் இருந்தபோது இந்தோனீசிய தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அப்போது, அக்கப்பலில் போதைப்பொருள் இருப்பது தெரியவந்ததாக பாத்தாம் தீவில் கடந்த .ஜுலை 17 ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இந்தோனீசியாவின் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கூறியிருந்தது.
இந்தோனீசியச் சட்டப்படி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூவருக்கும் அதிகபட்சத் தண்டனையான மரண தண்டனை விதிக்கும்படி அரசுத் தரப்பு கோரியுள்ளது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இம்மூன்று இந்தியர்களின் வழக்கறிஞர் குழு, இவ்வழக்கில் நிபுணத்துவ சாட்சியாக ஓய்வுபெற்ற இந்தோனீசியக் கடற்படை அதிகாரியும், அனைத்துலக கடற்சார் சட்ட நிபுணரான திரு சோல்மன் பி. போன்டோவை நீதிமன்ற விசாரணையின்போது முன்னிலையாகச் செய்தது.
“கப்பல்துறை சார்ந்த சட்டவிதிகளின்படி கப்பலில் உள்ள பொருள்களும் சரக்குகளும் மாலுமியின் பொறுப்பு. எனவே மாலுமிக்குத் தெரியாமல் கப்பலில் பொருள்களைப் பதுக்குதல் சாத்தியமில்லை என்று திரு போன்டோ விசாரணை நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தெரிவித்திருந்தார்,” என்று விவரித்தார் திரு ஜான்.
மேலும், இவ்வழக்குத் தொடர்பில் இந்திய நாட்டவர்களுக்கு போதிய உதவிகளைச் செய்துதருமாறு இந்தோனீசியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தை நாடியுள்ளதாகவும் அவர் சொன்னார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவரில் ஒருவரின் மனைவி புற்றுநோய் பாதிப்பிற்காகச் சிகிச்சை பெற்று வருவதாகப் பிரதிவாதிகள் வழக்கறிஞர் குழு கூறியது.
இவ்வழக்கின் தொடர்பில் கப்பல் மாலுமி மார்ச் 14ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
“வரும் நாள்களில் நடைபெறவுள்ள விசாரணையானது பல தகவல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும்; அது கட்சிகாரர்களுக்கு நன்மையான தீர்ப்பை அளிக்கும்,” என்று பிரதிவாதிகள் வழக்கறிஞர் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.