சிங்கப்பூரின் மரபுடைமைச் சுவரோவியக் கலைஞர் யிப் யூ சோங்கின் கலைப்பயணத்தில் இந்தியப் பண்பாடு பின்னிப் பிணைந்திருக்கிறது.
இவரது சுவரோவியங்கள் பல லிட்டில் இந்தியாவுக்கும் சைனாடவுனுக்கும் அழகு சேர்த்துள்ளன. ‘நேற்றைய சிங்கப்பூர்க் கதைகள்’ தொடர் (Stories from Yesteryear Series), ‘என் சிங்கப்பூரை வரைகிறேன்’ (I Paint My Singapore) ஆகியவற்றின்வழி சிங்கப்பூரின் இந்தியச் சமூகப் பண்பாட்டு வாழ்வியலை தமது தூரிகைவழி பதிவாக்கியுள்ளார் திரு யிப்.
“சிறு வயதிலிருந்தே எனக்கு இந்தியப் பண்பாடு மீது பெரும் ஈடுபாடு இருந்தது,” என்று 56 வயது திரு யிப் கூறினார்.
சைனாடவுனில் வளர்ந்த திரு யிப், தம் வீட்டுக்கு அருகிலுள்ள ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தையும் லயன் சித்தி விநாயகர் ஆலயத்தையும் காண்பதன் வழி இந்தியர் பண்பாட்டைப் பற்றிப் புரிந்துகொள்ளத் தொடங்கினார்.
திருமணத்திற்குப் பிறகு மனைவியுடன் இந்தியாவுக்குத் தேன்நிலவு சென்றிருந்த திரு யிப், அந்நாட்டின் கலைநயத்தால் கவரப்பட்டார்.
“கணக்காய்வாளராகப் பணியாற்றியபோது, பணிநிமித்தமாக இந்தியாவுக்குப் பலமுறை சென்றுள்ளேன். இந்தியாவின் கலாசாரப் பன்முகத்தன்மை புரிதலை அப்பயணங்கள் மேலும் ஆழமாக்கின,” என்றும் அவர் கூறினார்.
கடந்த காலத்து மக்களின் எளிய வாழ்க்கை முறையில் இருந்த அழகை தம் ஓவியங்களின் வழி இன்றைய மக்களை ரசிக்க வகைசெய்கிறார்.
1980களில் சிறுவனாகப் பார்த்த தீமிதியையும் தீபாவளியையும் நினைகூர்ந்து திரு யிப், ஓவியங்களைத் தீட்டியிருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
2020ல் தான் வரைந்த ‘தீபாவளி ஈவ் அட் சிராங்கூன் ரோடு’ (Deepavali Eve at Serangoon Road) அக்ரிலிக் வண்ணப் படத்தை நினைவுகூர்ந்த திரு யிப், 1980களுக்கும் இன்றைக்கும் தாம் பார்த்த வேறுபாடுகளை விளக்கினார்.
“எண்பதுகளில் எளிமை இருந்தது. கடைசி நேர பொருள் வாங்கலில் ஈடுபட்டிருந்த மக்களின் பரபரப்பு என் மனத்தில் அப்படியே காட்சியாகப் பதிந்துள்ளது. அன்றைய இந்திய ஆடவர்கள் பலர் இந்தியச் சட்டைகளை அணிந்திருப்பர். பெண்கள் பெரும்பாலும் சேலை உடுத்தி தலையில் பூச்சூடியிருப்பர்,” என்று தம் நினைவுகளை அசைபோட்டார்.
தீபாவளி மட்டுமின்றி, தீமிதி, தைப்பூசம் உள்ளிட்டவற்றையும் தம் ஓவியக்கண்ணால் மனத்தில் பதியவைத்துள்ளார் திரு யிப்.
தற்காலக் கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாவை, கூடுதல் கட்டுக்கோப்புடன் நடத்தப்படுகின்றன என்றாலும் அந்தக் காலத்தில் கொண்டாட்டங்களை எளிய மக்களே முன்னெடுத்துச் சென்றதாகத் திரு யிப் குறிப்பிட்டார்.
மலேசியா, இந்தியா, சீனா, ஐரோப்பா எனப் பல நாடுகளுக்கும் அழைக்கப்பட்டு அங்குள்ள பண்பாட்டுக் கூறுகளை ஓவியங்களாக்கியுள்ள திரு யிப், பன்முகத்தன்மையின் அழகை ரசிப்பதுடன் அதனைப் பிறரையும் ரசிக்கும்படி செய்வதில் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.
“உலகின் பல்வேறு இடங்களில் வெவ்வேறு பண்பாடுகள் கொண்டுள்ள மக்கள் ஒருவரோடு ஒருவர் மோதுவதைக் காண்கிறேன். ஆனால் சிங்கப்பூரில் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ்கின்றனர். இருளை அகற்றி ஒளிதரும் சுடர்விளக்கு என்ற தீபாவளியின் தத்துவத்தை சிங்கப்பூரின் பல இனச் சமூகம் நன்கு செயல்படுத்துகிறது,” என்றார் திரு யிப்.

