தீபாவளி என்றால் ஒளித் திருவிழா மட்டுமல்ல, சேலைகளின் அழகை அரங்கேற்றும் கொண்டாட்டமும்கூட.
சிங்கப்பூர் உட்பட உலக நாடுகளில் இந்திய சமூகத்தினர் புடவைகள் மீது ‘காதல்’ கொண்டிருக்கின்றனர்.
எல்லா வாழ்க்கைச் சூழல்களையும் சேர்ந்தோரை ஒன்றிணைத்து கொண்டாட்ட உணர்வில் திளைக்கச் செய்கிறது, இந்தியப் பாரம்பரியத்தை உலக மேடையில் அரங்கேற்றும் சேலை. குறிப்பாக புடவை கட்டிக்கொள்வதில் அதீத ஆசைகொண்ட பெண்களுக்கு இது பொருந்தும்.
இந்தியாவில் உள்ள பல்வேறு வட்டாரங்களுக்கென தனிப்பட்ட சேலை வடிவங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றை எடுத்துக்காட்டுகின்றனர் அந்நாட்டின் வெவ்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த பெண்கள் சிலர்.
“நான் கட்டியிருக்கும் ‘பைத்தானி’ மகாராஷ்டிராவிலிருந்து வந்தது. என் மனதில் அதற்கென தனி இடம் உண்டு. எனது திருமணத்துக்காக இதுவே நான் வாங்கிய முதல் ஆடை என்பது அதற்குக் காரணம்,” என்றார் விளம்பரப் பிரிவுத் தலைவரான தீபாலி சத்புத்தே. ‘பைத்தானி’, மயில் அலங்காரங்கள் போன்ற துல்லியமான வடிவங்களைக் கொண்ட சேலை வகை என்றும் அவர் விவரித்தார்.
அதேபோல் கேரள மாநிலத்தில் பிரபலமான ‘கசவு’ சேலையை அணிகிறார் ஒப்பனை அலங்காரக் கலைஞர் காயத்ரி மேனன்.
“பல்லினச் சமுதாயத்தில் ஒருவரின் பூர்வீகத்தையும் தென்னிந்தியக் கலாசாரங்களின் அழகை எடுத்துக்காட்டவும் இது வழிவகுக்கலாம்,” என்றார் அவர்.
சேலை, உலகின் ஆகப் பழைமைவாய்ந்த ஆடைகளில் ஒன்றாகும். 5,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. காலத்தின் மாற்றங்களுக்கேற்ப மாறிக்கொண்டு வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
“பஞ்சாப் மாநிலத்தின் கோலாகலமான, சிறப்புமிக்க சேலைக் கலாசாரத்தை முன்னிறுத்தி வருகிறது ‘ஃபுல்காரி’. கலைநயம், பண்பாடு இரண்டையும் அது எடுத்துக்காட்டுகிறது,” என்றார் பாரம்பரிய இந்திய ஆடைகளை விற்கும் கடையை நடத்தும் சந்தீபா அரோரா நாயர்.
இந்தச் சேலையின் துல்லிய மலர் வடிவங்கள் பொதுவாக துப்பட்டா, லெஹெங்கா போன்ற ஆடைகளில் இடம்பெறுபவை என்றும் அவை, பஞ்சாப் மாநிலத்தில் வண்ணங்களுக்கும் வடிவங்களுக்கும் இருக்கும் அமோக வரவேற்பைக் கண்முன் நிறுத்துவதாகவும் அவர் வருணித்தார்.
11ஆம் வகுப்பிலிருந்து புடவைகளை அணிந்துவரும் கீதா பாலகங்காதரன், “இந்தியாவின் கலாசாரச் சிறப்பைச் சித்திரிக்கிறது சேலை. கலாசாரம், எழில், ஆனந்தத்தின் கொண்டாட்டமாக விளங்குகிறது தீபாவளி. எனவே, இந்தியாவின் தனிச்சிறப்புமிக்க சேலை கலாசாரத்தை ‘அரங்கேற்ற’ இதுவே சரியான நேரம்,” என்றார்.
“ஒரு காலத்தில் பள்ளிச் சீருடையாக இருந்த புடவை, இப்போது அவரவர் தனிப்பட்ட முறையில் மரபையும் அடையாளத்தையும் எடுத்துக்காட்டும் ஒன்றாகவும், புடவையை உருவாக்கும் கைகளுக்கும் இதயங்களுக்கும் என்றும் மாறாத மரியாதை செலுத்தும் ஆடையாகவும் விளங்குகிறது,” என்றும் அவர் பெருமைப்பட்டார்.