நெக்ஸ் மாலில் நடிகரைக் குத்தியதாகக் கூறப்படுபவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
7a5901e0-78be-4769-9f3e-5c638823532a
உள்ளூர் நடிகர் ரியான் லியான் - கோப்புப் படம்: இணையம்

நெக்ஸ் மாலுக்கு வெளியே தாக்கப்பட்டு முகத்தில் காயங்கள் ஏற்பட்டதால் தோற்றம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் உள்ளூர் நடிகர் ரியான் லியான் உள்ளார்.

நவம்பர் 22ஆம் தேதி மாலை 6 மணியளவில் சிராங்கூன் நெக்ஸ் மாலுக்கு வெளியே உள்ள டாக்சி நிறுத்தத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26) தெரிவித்தது.

டாக்சி நிறுத்தத்திற்கு அருகில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது ஆடவர் ஒருவர் தம்மைக் கத்தியால் தாக்கியதாக 39 வயது லியான் கூறினார். அவர் முகத்தில் குறைந்தது மூன்று முறை வெட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தாக்குதலை தடுக்க முயன்றபோது முடி திருத்தகத்தின் உரிமையாளரான லியானின் நண்பரும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இருவரும் தாக்கியவரைக் கட்டுப்படுத்தினர். அந்த நண்பர் தனது சக ஊழியரை உதவிக்கு அழைக்க, அவர் காவல்துறையையும் அவசர மருத்துவசேவை வண்டியையும் (ஆம்புலன்ஸ்) அழைத்தார்.

வேலை முடிந்து அவ்வழியாகச் சென்ற இரு மருத்துவ ஊழியர்கள், அவ்விருவரின் காயங்களுக்குக் கட்டுப்போட உதவினர்.

தாக்கியவரையோ அல்லது அவரது நோக்கமோ தனக்குத் தெரியாது என்று ஷின் மினிடம் லியான் கூறினார்.

“மருத்துவர் என்னை மனதளவில் தயாராக இருக்கும்படி கூறியுள்ளர்,” என்று அவர் கூறினார். “குணமடைந்த பிறகு என் முகம் பாதிக்கப்படலாம், தழும்புகள் இருக்கும்,” என்றும் மருத்துவர் கூறியதாக லியான் வருத்தப்பட்டார்.

தாக்குதல் தொடர்பாக 21 வயது ஆரோன் சாமுவேல் யுகோன் மீது சனிக்கிழமை (நவம்பர் 23) குற்றம் சாட்டப்பட்டதாக அச்செய்தித்தாள் தெரிவித்தது.

இந்தக் குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது இரண்டும் வழங்கப்படலாம்.

நீதிமன்ற பதிவுகளின்படி, யுகோன் சாங்கி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுத் திரும்பியதும் தடுப்புக் காவவில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அவரது அடுத்த நீதிமன்ற விசாரணை நவம்பர் 29ஆம் தேதி நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்