பிணையில் இருந்த ஒருவர், மலேசியாவுக்குத் தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் மலேசிய லாரி ஓட்டுநர் மீது சனிக்கிழமை (அக்டோபர் 25) அன்று நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியின் ஓட்டுநர் இருக்கையின் பின்புறத்தில் 36 வயது சீ வாய் யூவென்னை மறைத்து ஜோகூருக்கு தப்பிச் செல்ல தனேஷ் முருகன், 23, உதவியதாகக் கூறப்படுகிறது.
ஏப்ரல் 5ஆம் தேதி துவாஸ் சோதனைச் சாவடி வழியாக சீ தனது பாஸ்போர்ட் இல்லாமல் சட்டவிரோதமாக வெளியேறியதாக நம்பப்படுகிறது.
குடிநுழைவு சட்டத்தின்கீழ் தனேஷ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு நவம்பர் 1ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.
மலேசியரான சீ மீதும் கடந்த மார்ச் மாதம் குற்றம்சாட்டப்பட்டது. அந்த மாதத்தில் சுகாதார அறிவியல் ஆணையம் கைப்பற்றிய மின்சிகரெட் தொடர்பான பொருள்களை கிடங்கிலிருந்து திருடும் திட்டத்தில் சீ பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பில் சீ மற்றும் இரண்டு சிங்கப்பூரர்களான எல்வின் சூரியகாந்தன், 22, லிம் ஷி வெய், 38, ஆகிய மூவர் மீதும் கிடங்கில் நுழைந்து திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்ட சீ, சிங்கப்பூரிலிருந்து தனது சொந்த நாட்டுக்கு சட்டவிரோதமாக வெளியேறி தப்பிவிட்டார். இதற்கு தனேஷ் முருகன் உடந்தையாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

